பெண்ணை பின் தொடர்ந்து புகைப்படம் எடுத்த கடலை வியாபாரி கைது !! போதை மாத்திரை விற்பனை !!
பெண்ணை பின் தொடர்ந்து புகைப்படம் எடுத்த கடலை வியாபாரி கைது. அதிர்ச்சி தரும் காரணம்

பெண்ணை பின் தொடர்ந்து புகைப்படம் எடுத்த நபர் கைது
சென்னை பூக்கடையில் 37 வயது பெண் அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து கொண்டு அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் தள்ளு வண்டியில் கடலை வியாபாரம் செய்து வரும் வீரபாரதி என்பவர் அப்பெண் கடலை வாங்கும் போது அப்பெண்ணிடம் பேசி பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் அப்பெண் மேற்படி வீரபாரதியிடம் பேசுவதை தவிர்த்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வீரபாரதி , அப்பெண்ணை பின் தொடர்ந்து சென்று , அப்பெண்ணை செல்போனில் புகைப்படம் எடுத்தும், கடந்த 12.12.2025 அன்று அப்பெண் வீட்டில் இருந்த போது தகாத வார்த்தைகள் பேசியும் அப்பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட அப்பெண் கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கொத்தவால்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அரியலூர் மாவட்டம் கூவாகம் பகுதியை சேர்ந்த வீரபாரதி ( வயது 27 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட வீரபாரதி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
வெளி மாநிலங்களிருந்து சட்ட விரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகள் வாங்கி , சென்னையில் விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது.
சென்னை விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் விருகம்பாக்கம், செல்லியம்மன் கோவில் தெருவிலுள்ள, அம்பேத்கர்நகர் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை விசாரணை செய்தனர்.
அப்போது , அவரை சோதனை செய்த போது, அவர் உடல்வலி நிவாரண மாத்திரைகளை சட்ட விரோத விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் பேரில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த சென்னை காட்டுப்பாக்கம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ், ( வயது 26) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 41 எண்ணிக்கைகள் கொண்ட Nitrazepam & Tapentadol உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் , சதீஷ் வெளி மாநிலத்திலிருந்து மேற்படி மாத்திரைகளை வாங்கி வந்ததும், இவர் மீது ஏற்கனவே போதைப் பொருள், வழிப்பறி உட்பட 10 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட சதீஷ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.





















