சென்னை ஏரிகளில் மிதக்கும் சோலார் பேனல் திட்டம்: மின்சார உற்பத்திக்கு புதிய முயற்சி! சாத்தியக்கூறுகள் என்ன?
Floating solar Panels: சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஆகிய 3 ஏரிகள் மீது மிதக்கும் சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

சென்னையின் முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஆகிய ஏரிகள் இருக்கின்றன. பல ஏக்கர் பரப்புள்ள இந்த ஏரிகள் மீது, சோலார் பேனல்கள் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிகரித்து வரும் மின்சார தேவைகளை கருத்தில் கொண்டு, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க மின்சார ஆற்றலால், நீண்ட ஆண்டுகளுக்கு பயன் அளிக்கும் என்பதால் தமிழக அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்திற்காக சாத்தியக்கூறுகள் ஆராய்வதற்காக, தமிழக அரசு டெண்டர் விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மிதக்கும் சூரிய ஒளி தகடுகள் சாத்தியமா ? - (Floating Solar Panels / Floataics)
தண்ணீர் மீது சோலார் பேனல்களை மிதக்க விட்டு மின்சாரம் தயாரிக்க முடியும். இது "மிதக்கும் சோலார் பேனல்கள்" (Floating Solar Panels / Floataics) முக்கிய தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது. வருங்காலங்களில் இந்த தொழில்நுட்பம் அதிகளவு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக இருக்கும் சோலார் பேனர்களை போன்று, இந்த சோலார் பேனர்களும் அதே வழியில் சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரமாக மாற்றுகிறது.
மிதக்கும் சோலார் மின்சார பேனல்கள் ஏரிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் போன்ற நீர்நிலைகளின் மேற்பரப்பில், பிரத்யேக மிதக்கும் அமைப்புகளின் (floating structures) மீது பொருத்தப்படுகின்றன. அதன் மீதுதான் இந்த பேனல்கள் பொருத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்கள் என்ன ? Key features of floating solar panels
நிலத்தில் சோலார் பேனல்களை பொருத்துவது என்பது, பல ஏக்கர் நிலங்கள் தேவைப்படும். மிதக்கும் சோலார் பேனல்கள் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதால், விவசாய நிலங்கள் அல்லது மக்கள் வசிக்கும் பகுதிகள் பாதிக்கப்படாது. ஏரி குளங்கள் போன்ற நீர் நிலைகளில் சோலார் பேனல்களை நிறுவுவதன் மூலம், அருகில் ஈரப்பதம் இருப்பதால் சோலார் பேனல்களில் செயல் திறன் அதிகரிக்கும்.
மிதக்கும் சோலார் பேனல்கள் நீர்நிலையின் மேற்பரப்பை மறைப்பதால், சூரிய ஒளியின் நேரடித் தாக்கம் குறைந்து, நீர் ஆவியாவது குறைகிறது. இந்த சோலார் பேனல்கள் மறைமுகமாக, நீர் ஆவி ஆகுவதை தடுக்கும். இது ஏரி அல்லது குளங்கள் வேகமாக வற்றுவது தடுக்கும் ஆற்றல் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ?
சென்னையில் உள்ள ஏரிகளில் இந்த திட்டம் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன்பிறகு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும். திட்ட அறிக்கையின் அடிப்படையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















