உறவினரை ஏமாற்றி ரூ.1 கோடி மோசடி ; தந்தை , மகன் கைது ! மடிப்பாக்கம் பரபரப்பு , நடந்தது என்ன ?
தொழில் துவங்குவதற்காக, உறவினரிடம் 1 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிய தந்தை, மகன் கைது

1 கோடி ரூபாய் கடன் வாங்கி , திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிய தந்தை, மகன் கைது
சென்னை மடிப்பாக்கம் ராம் நகரில் வசித்து வருபவர் சுகந்தி ( வயது 57 ) இவர், மடிப்பாக்கம் போலீசில் கடந்த செப்டம்பரில் அளித்த புகாரில் ;
கடந்த 2019 - ம் ஆண்டு, தன் கணவர் ரமேஷ் குமாரின் அக்கா சரளாதேவி, அவரது கணவர் குணசேகர், அவர்களின் மகன் விஜய் ஆகியோர், விடுதி நடத்துவதற்காக என் கணவரிடம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கினர். லாபத்தில் பங்கு தருவதாகவும் கூறினர்.
இதையடுத்து, திருவான்மியூரில் உள்ள வீட்டை விற்று, அதில் வந்த பணத்தில், ஒரு கோடி ரூபாயை வங்கி மூலமாகவும், ரொக்க மாகவும் சரளாதேவி குடும்பத்தினரிடம் கொடுத்தேன்.
சில மாதங்கள் மட்டும், லாபத்தில் பங்காக வங்கியில் 75,000 ரூபாய் செலுத்தினர். பின் கொரோனா காலத்தில் நஷ்டம் எனக் கூறி பணமும் கொடுக்கவில்லை.
2020 ஆண்டு முதல் , 2023 ஆண்டு வரை, மாதம் 40,000 ரூபாய் மட்டும் வட்டி பணம் எனக் கூறி செலுத்தினர். அதன் பின், மீதி பணத்தை செலுத்தாமல் ஏமாற்றி வந்தனர்.
பணத்தை திரும்ப கேட்ட போது மூவரும் தகாத வார்த்தைகளால் பேசி எங்களை மிரட்டினர். எனவே, மூவர் மீதும் நடவடிக்கை எடுத்து தர வேண்டி மீதி பணம், 98.3 லட் சம் ரூபாயை பெற்று தர வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து விசாரித்த மடிப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார், பள்ளிக்கரணையைச் சேர்ந்த குணசேகர் ( வயது 67 ) அவரது மகன் விஜய் ( வயது 36 ) ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். சரளாதேவியிடம் பெண் போலீஸ் மூலம் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
பொதுமக்களை விரட்டி , விரட்டி வெட்டிய மது போதை கும்பல்
சென்னை கொளத்துார் ராஜமங்கலம், சிவசக்தி நகர் ஒன்றாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரா ( வயது 52 ) இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஆகாஷ் என்பவரை தேடி, இரு சக்கர வாகனத்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. ஆகாஷ், வீட்டில் இல்லாததால் அங்கு நின்றிருந்த சந்திராவை, மது போதை கும்பல் சரமாரியாக வெட்டியது.
அதை தடுக்க முயன்ற சந்திராவின் மகன் ராஜேஷ் ( வயது 36 ) என்பவரையும், அந்த கும்பல் வீடு புகுந்து வெட்டியுள்ளது. அக்கம் பக்கத்தினர், தாய், மகன் இருவரையும் மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சந்திராவின் தலையில் இரண்டு தையலும், ராஜேஸ்க்கு 15 - க்கும் மேற்பட்ட தையலும் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அதே போதை கும்பல், கொளத்துார், மேட்டு தெருவைச் சேர்ந்த கார்த்திக் ( வயது 35 ) மற்றும் அவரது நண்பர்கள், தமிழ்ச்செல்வன் ( வயது 26 ) மற்றும் மனோஜ் கிரண் ( வயது 32 ) ஆகியோரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.
படுகாயமடைந்த மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த கும்பல் கோயம்பேட்டில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரையும் வெட்டியுள்ளது. ராஜமங்கலம் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.
மதுபோதை கும்பலைச் சேர்ந்தவர்கள், ஏற்கனவே போதை பொருள் வழக்கில் கைதாகி சிறை சென்றதாக தெரிகிறது. மேலும் கார்த்திக்குடன் இருந்த முன் பகை காரணமாக இச்சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.






















