Chennai Metro Rail: 6வது வாரமாக மின்சார ரயில்கள் ரத்து! - கூடுதல் மெட்ரோ, பேருந்து சேவைகளுக்கு ஏற்பாடு!
மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் இன்று 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Metro Rail: பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் இன்று 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்:
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், "சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுவதால் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இன்று மார்ச் 17ஆம் தேதி மெட்ரோ ரயில்களில் அதிக பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பயணிகளின் சிரமத்தை குறைக்க காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
வழக்கமான ஞாயிற்றுகிழமை அட்டவணைப்படி, காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும். ஆனால், இன்று (மார்ச் 17ஆம் தேதி) மட்டும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அனைத்து பயணிகளும் தங்களது பயணத்தை திட்டமிட்டு பயணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
இன்று காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளும் கூடுதலாக 150 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள்:
பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, காலை 11.55, நண்பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55 பகல் 2.40, பகல் 2.55 மணிக்கு தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இயக்கப்பட உள்ளது. மேலும், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே காலை 9.40, காலை 10.55, காலை 11.30, காலை 11.05, பகல் 1.00 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் - தாம்பரம் இடையே காலை 9.30 மணிக்கும், தாம்பரம் - திருமால்பூர் இடையே நண்பகல் 12.00 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இன்று மின்சார ரயில்கள் ரத்து:
கடந்த சில நாட்களாகளே வார இறுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மார்ச் 17) சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் சேவை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க