(Source: ECI/ABP News/ABP Majha)
தீபாவளிக்கு படையெடுக்கும் மக்கள்! போக்குவரத்து நெரிசலின்றி காணப்படும் பரனூர் சுங்கச்சாவடி! சாத்தியமானது எப்படி?
தீபாவளி பண்டிகை காரணமாக சென்னை புறநகரில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டாலும் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசலின்றி காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் அதிக அளவிலான வாகனங்கள் தென் மாவட்டத்தை நோக்கி செல்கின்றனர். பரனூர் சுங்கசாவடியில் இருந்து, பேருந்து மூலம் தென் மாவட்டத்தை நோக்கி செல்ல ஏராளமான பயணிகள் காத்திருக்கும் நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரனூர் சுங்கசாவடியில் காவல் உதவி மையம், தற்காலிக நிழற்குடை, கழிப்பறை, குடிநீர், என அடிப்படை வசதிகளை செய்துள்ளனர்.
கூடுதல் பணியாளர்கள்:
வழக்கமாக பரனூர் சுங்கசாவடியில் 50 ஊழியர்கள் பணியில் ஈடுபடுவது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக 50 ஊழியர்கள் நியமித்துள்ள நிலையில் மொத்தம் 100- ஊழியர்கள் சுங்கசாவடியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாலை முதலே ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுக்க துவங்கியதால் சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதேபோன்று மறைமலைநகர் மற்றும் சிங்கப்பெருமாள் கோவில் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இருந்தும் பரனூர் சுங்கச்சாவடி அருகே பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க காவல்துறையினரால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இருசக்கர வாகனங்களுக்கு தனி வழி
இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு என பிரத்யேக வழி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோன்று ஆட்டோக்கள் செல்வதற்கும் சுங்கச்சாவடி அருகே தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் பெரும் அளவில் போக்குவரத்து தடுக்கப்பட்டது.
காவல் உதவி மையம்
காவல் உதவி மையம் கட்டமைக்கப்பட்டு தொடர்ந்து காவலாளர் ஒருவர் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து வாகனங்களை வேகமாக நகர செய்தார். அதேபோன்று பரனுர் சுங்கச்சாவடி ஆங்காங்கே மக்கள் பேருந்து நின்று ஏறுவதை தடுத்து தற்காலிக பேருந்து நிறுத்தம் ஒன்று உருவாக்கப்பட்டதால், பேருந்துகளுக்காக காத்திருப்பவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டனர். பேருந்துகள் நிறுத்துவதற்கு என தற்காலிக பேருந்து மையம் உருவாக்கப்பட்டது. அதேபோன்று வருகின்ற பேருந்து குறித்த அறிவிப்பை வெளியிட்டதால், பேருந்து வருவதற்காக காத்திருந்த பயணிகளும் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்ததால் நெரிசல் குறைந்தது.
பாஸ்ட் ட்ராக் பிரச்சனைகள்
பாஸ்ட் ட்ராக் வேகமாக செயல்பட அதற்கு ஏற்ப சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் தனி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ட்ரோன் மூலம் கண்காணிப்பு
அவ்வப்பொழுது வாகனங்களின் வருகையும் போக்குவரத்து நெரிசல் குறித்த அறிவிப்பையும் காவல்துறையினர் ட்ரோன் உதவியுடன் ஒருபுறம் கண்காணித்து வந்தனர்.
மறுபுறம் தொடர்ந்த அவலம்
பல்வேறு நடவடிக்கைகளால் பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை என்றாலும், பிற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளை சிரமத்தை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாமண்டூர் பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவல நிலை தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருந்தது