Cyclone Mandous: மாண்டஸ் புயலால் இடிந்து விழுந்த சுவர்; தாய் உயிரிழப்பு, 3 வயது மகள் படுகாயம்
மாமல்லபுரம் அருகில் உள்ள கடற்கரையில் நள்ளிரவு 2.30 மணி அளவில் 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசி புயல் கரையைக் கடந்தது.
சென்னையில் மாண்டஸ் புயல் காரணமாக 300 மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக மாநகராட்சி மேயர் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாள்களாக தமிழ்நாட்டு மக்களை பரிதவிக்க வைத்த மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு 2.30 மணி அளவில் கரையைக் கடந்து தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.
மாமல்லபுரம் அருகில் உள்ள கடற்கரையில் நள்ளிரவு 2.30 மணி அளவில் 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசி புயல் கரையைக் கடந்தது. இதன் எதிரொலியாக சூறைக்காற்றுடன் மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
பெண் உயிரிழப்பு:
இந்நிலையில், சைதாபேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மாண்டஸ் புயல் கரையை கடந்த போது பலத்த காற்று வீசியதன் விளைவாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
வீட்டில் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்றரை வயது சிறுமி, தாய், தந்தை படுகாயம் அடைந்தனர். இதில், தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
மின்சாரம் தாக்கி அத்தை, மருமகன் உயிரிழப்பு:
அதேபோல, சென்னை மடிப்பாக்கம், ராம்நகர் 7வது மெயின் ரோட்டில் குடிசை வீட்டில் வசித்து வருபவர்கள் லட்சுமி(45). இவரது அண்ணன் மகன் ராஜேந்திரன்(25), இருவரும் நேற்றிரவு மாண்டஸ் புயலின் காரணமாக குடிசை வீட்டில் இருந்தால் ஆபத்து என எண்ணி அருகில் உள்ள ஒரு வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் உறங்கச் சென்றனர்.
அப்போது அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. ஒரு பாய் மட்டும் எடுத்து சென்றதால் மற்றொரு பாய் எடுக்க லட்சுமி வந்த போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து கீழே விழுந்தார். அவரை மீட்க வந்த ராஜேந்திரனும் மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இரவு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது, பின்னர் மின்சாரம் வந்த போது மின் கம்பியை மிதித்ததால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
சம்பவம் அறிந்து வந்த மடிப்பாக்கம் போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் சேதம்:
சென்னையில் 300 மரங்கள் முறிந்து விழுந்துள்ள நிலையில், முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகளில் சென்னை மாநகராட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மேலும் கரையைக் கடந்த மாண்டஸ் புயலால் சென்னை, காசிமேட்டில் 150 படகுகள் சேதமாகின. 3 படகுகள் கடலில் மூழ்கின.