Chennai: வாட்டர் மெட்ரோ, டிராம்.. சென்னையில் அடுத்த 25 வருஷத்துக்கு இதுதான் ஸ்கெட்ச்
சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளில் வாட்டர் மெட்ரோ, டிராம் சேவையை அமல்படுத்தி போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சுமார் 1 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு நலத்திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் அரசு மேற்கொண்டு வருகிறது.
அடுத்த 25 ஆண்டு திட்டம்:
சென்னையைப் பொறுத்தமட்டில் பெரும் சவாலாக இருப்பது போக்குவரத்து நெரிசலே ஆகும். இதைச் சரி செய்ய மெட்ரோ, மின்சார ரயில், பேருந்து சேவைகளை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், அடுத்த 25 ஆண்டுகளில் சென்னையில் மேற்கொள்ள உள்ள பொதுப்போக்குவரத்து திட்டங்களை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
அந்த பரிந்துரையில் உள்ள திட்டங்களை கீழே காணலாம்.
1. 346 புதிய பேருந்து நிறுத்தங்கள். அதில் 30 புதிய பேருந்து டிப்போக்கள்
2. தாம்பரம் - அடையாறு இடையே புதிய மெட்ரோ வழித்தடம்
3. பெருங்களத்தூர் - மாதவரம் ( புறவழிச்சாலை வழியாக) புதிய மெட்ரோ வழித்தடம்
4. கோயம்பேடு - பூந்தமல்லி, பல்லாவரம் - குன்றத்தூர், வண்டலூர் - கேளம்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் நியோ மெட்ரோ சேவை
5. எண்ணூர் - சிங்கப்பெருமாள் கோயில் இடையே புதிய புறநகர் ரயில் சேவை
6.ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சிபுரம் இடையே புறநகர் ரயில் சேவை
7. சென்னையில் டிராம் சேவை: தி.நகர் - நுங்கம்பாக்கம் - நந்தனம் - கலங்கரை விளக்கம் இடையே டிராம் சேவை
8. சென்ட்ரல் - கோவளம் - மாமல்லபுரம் வழித்தடத்தில் இரு கட்டங்களாக வாட்டர் மெட்ரோ சேவை
9. சென்னை துறைமுகம் - பரந்தூர் - மாமல்லபுரம் - திருப்பதியை மையமாக வைத்து மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஏர் டாக்சி சேவை
வாட்டர் மெட்ரோ:
மேலே கூறிய திட்டங்களை அடுத்த 25 ஆண்டுகளுக்குள் சென்னையில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதில் வாட்டர் மெட்ரோ வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெருக்கடி கட்டுக்குள் வரும்.
மேலும், ஒட்டுமொத்த சென்னை நகரையும் மெட்ரோ ரயிலால் இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெறறு வருகிறது. புறநகர் சென்னையையும் மெட்ரோ ரயிலால் இணைக்கும் பணியில் அரசு மேற்கொண்டு வருகிறது.





















