Unity Mall Chennai: சென்னையின் அடுத்த அடையாளம், வணிகம் தொடங்கி சுற்றுலா வரை, யூனிட்டி மால் - 8 அடுக்குகள், 5.82 ஏக்கர்
Unity Mall Chennai: கைவினைக் கலைஞர்களின் தொழிலை ஊக்குவிக்கும் விதமாக, சென்னையில் 227 கோடி ரூபாய் செலவில் யூனிட்டி மால் எனப்படும் வணிக வளாகம் அமைய உள்ளது.

Unity Mall Egmore: கைவினைக் கலைஞர்களின் தொழிலை ஊக்குவிக்கும் விதமாக, சென்னை எழும்பூரில் அமையும் வணிக வளாகத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் அடிக்கல் நாட்டினார்.
யூனிட்டி மால்:
சென்னையின் பரந்து விரிந்த வணிக நிலப்பரப்பின் மற்றொரு அடையாளமாக, மேலும் ஒரு பிரமாண்ட வணிக வளாகம் (Shopping Mall) விரைவில் அமைய உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற கைவினைஞர்கள் தங்கள் கைத்தறி பொருட்கள் மற்றும் கைவினை வணிகத்தை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில், எழும்பூரில் ஒருங்கிணைந்த வணிக வளாகமான யூனிட்டி மால் கட்டுவதற்கான பணிகளை பொதுப்பணித்துறை (PWD) தொடங்கிகியுள்ளது. எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில், 227 கோடி ரூபாய் செலவில் 4.54 லட்சம் சதுர அடியில் கட்டப்பட உள்ள யூனிட்டி மாலிற்கு கடந்த மாத இறுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.
8 அடுக்குகள், 5.82 ஏக்கர் பரப்பளவு:
கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறையின் நிதியுதவியுடன், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. 5.82 ஏக்கரில் எட்டு தளங்கள் மற்றும் இரண்டு பேஸ்மெண்ட்களை கொண்ட ஒரு பிரதான கட்டிடம் மற்றும் துணை கட்டிடங்கள் திட்டத்தின் மூலம் கட்டப்பட உள்ளன. ஏசி வசதியுடன் கூடிய இரண்டு பேஸ்மெண்ட்கள் மொத்தம் 600 கார்களை பார்க் செய்யும் திறனை கொண்டிருக்கும். இது நகரில் அமைந்துள்ள பல பரந்த மால்களுக்கு இணையான கலைப்பொருட்கள், சிற்றுண்டிச்சாலைகள், லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு தளத்திலும் கியோஸ்க் மற்றும் கழிப்பறைகள் அமைக்கப்படுவதோடு, மாலில் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த வசதிகள் மற்றும் தீ தடுப்பு ஏற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
யூனிட்டி மாலின் வணிக நோக்கம்:
இந்த மால், 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' முயற்சியின் ஒரு பகுதியாக 41 மாவட்ட கடைகளுக்கான இடத்தை வழங்கும். இது மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தது ஒரு பொருளையாவது விளம்பரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதோடு, புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இருந்து வரும் கைத்தறி பொருட்களை காட்சிப்படுத்த 36 கடைகள் இருக்கும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பல்வேறு தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும், அதன் மூலம் கைவினைஞர்கள் மற்றும் நுகர்வோர் இடையேயான பிணைப்பை வலுப்படுத்தவும் இந்த மால் அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்ப்பட்டுள்ளது.
இதர வசதிகள்:
இது படைப்பு மற்றும் கலாச்சார கைவினைகளுக்கான வடிவமைப்பு மற்றும் அடைகாக்கும் மையம் (incubation centre), மாநாட்டு அறைகள், கோ-ஆப் டெக்ஸ் ஷோரூம்கள், கம்ப்யூட்டர் லேப், நிர்வாகம், பயிற்சி அறைகள், கைவினைப் பிரிவு மற்றும் ஆறாவது, இரண்டாவது மற்றும் எட்டாவது தளங்களில் டி-சைன் ஸ்டுடியோ ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மூலதன முதலீட்டிற்காக மாநிலங்களுக்கு சிறப்பு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் இப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திட்டப் பணிகள் முடிவது எப்போது?
உள்நாட்டு தயாரிப்புகளுக்கான பரந்த அணுகலை உறுதி செய்வதற்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மத்திய அரசாங்கத்தின் முன்முயற்சியின் ஒரு பகுதியாகவும் யூனிட்டி மால் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் 18 மாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் போன்ற நகரின் மையப்பகுதியில் யூனிட்டி மால் அமைந்துள்ளதால், ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலா தளமாக மட்டுமல்லாமல், நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் தங்கள் பொருட்களை எந்தத் தொந்தரவும் இல்லாமல் கொண்டு செல்வதும் எளிதாக இருக்கும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

