வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பணம் அபேஸ் - விஹெச்பி நிர்வாகி உட்பட 2 பேர் கைது
போலி ஜிஎஸ்டி ஆணையரை வைத்து தொழிலதிபரிடம் ரூ.1 கோடி பணம் பறித்த வழக்கில் விசுவ இந்து பரிஷத் தென் சென்னை மாவட்ட செயலாளர் தணிகைவேல் உட்பட 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ரம்யா அவுட்சோர்சிங் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இந்நிலையில் இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை வெங்கடேசன் கொடுத்தார்.
வெங்கடேசன் அளித்த புகார் மனுவில் "காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரம்யா அவுட் சோர்சிங் சொல்யூஷன் பிரைவேட் லிமிடட் என்ற பெயரில் மேன்பவர் அவுட்சோர்சிங் தொழில் செய்து வருகிறேன். ஜிஎஸ்டி (GST) பதிவு பெற்ற இந்த நிறுவனத்திற்கு மார்ச் 2021ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி சம்பந்தமாக சோதனை செய்ய மூத்த அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். 2017-18ஆம் ஆண்டு மற்றும் 2019-20 ஆம் நிதி ஆண்டில் 4.75 கோடி ரூபாய் அளவிற்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதை கண்டுபிடித்து அந்த தொகையை உடனடியாகச் செலுத்த நோட்டீஸ் கொடுத்துச் சென்றனர். இந்நிறுவனத்தின் ஆடிட்டர் மோகன் பாபுவை இதுசம்பந்தமாக அணுகினேன். அப்போது தணிகைவேல் என்பவர் தன்னிச்சையாக அறிமுகமாகி தனக்கு வருமானவரித் துறை அலுவலகத்தில் உயர் அதிகாரிகளைத் தெரியும் என்று கூறி நம்ப வைத்ததுடன், எனக்கு கொடுக்கப்பட்ட நோட்டீஸை ரத்து செய்ய வைப்பதாகவும் கூறினார்.
இது சம்பந்தமாக சென்னையில் உள்ள வருமானவரித் துறை ஆணையர் தீபக் கோத்தாரியை, 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். அப்போது ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் நோட்டீஸை ரத்து செய்வதாக தெரிவித்தார். இதனை நம்பி தணிகைவேல், தீபக் கோத்தாரி மற்றும் அவரது மகன் பிரசாத் கோத்தாரி ஆகியோரிடம் பல தினங்களில் ஒரு கோடி ரூபாய் கொடுத்தேன். பணம் கொடுத்த பிறகும் ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இருந்து தொடர்ச்சியாக நோட்டீஸ் வந்தது.
இதனால் சந்தேகமடைந்து செல்போன் மூலம் தீபக் கோத்தாரியைத் தொடர்புகொண்டு விசாரிக்க முயன்றபோது அவர் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார். உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும்" என வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் பிப்ரவரி மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நம்பிக்கை மோசடி, பண மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நங்கநல்லூரைச் சேர்ந்த தணிகைவேல், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தீபக் கோத்தாரி ஆகிய 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தீபக் கோத்தாரி தன்னை வருமானவரித் துறை கமிஷனர் என கூறி ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் கைதான தணிகைவேல் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தென்சென்னை மாவட்ட இணைச் செயலாளராக இருந்துவருவது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.