சென்னை ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! ஓட்டுநர் பற்றாக்குறையால் மின்சார ரயில் சேவை பாதிப்பு!
சென்னை ரயில் கோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஓட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை: சென்னை ரயில் கோட்டத்தில் 123 ஓட்டுனர் காலி பணியிடங்கள் உள்ளதால் மின்சார ரயில்கள் இயக்கம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, எனவே விரைவாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
123 ரயில் ஓட்டுனர் காலி பணியிடங்கள்
சென்னை ரயில் கோட்டத்தில், 123 ஓட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மின்சார ரயில் சேவையும் குறைக்கப்பட்டு உள்ளதால் பயணியர் அவதி அடைந்து வருகின்றனர். சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி தடத்தில், 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
50க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து
இவற்றில், தினமும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். போதிய ரயில்கள் இல்லாததோடு, வழக்கமாக செல்லும் ரயில்களின் சேவையும் அடிக்கடி ரத்து செய்யப்படுகிறது. ரயில் பாதைகள் மற்றும் யார்டு பராமரிப்பு பணி நடப்பதாக கூறி, வாரந்தோறும் 50க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவையை ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர். போதிய அளவில் மின்சார ரயில்கள் இயக்காததற்கு ரயில் ஓட்டுனர் காலி பணியிடங்களை நிரப்பாததே முக்கிய காரணம். சென்னை கோட்டத்தில், அனுமதிக்கப்பட்டுள்ள ரயில் ஓட்டுனர்களின் எண்ணிக்கை 423. ஆனால், 320 ரயில் ஓட்டுனர்கள் மட்டுமே உள்ளனர்; 123 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மின்சார ரயில் இயக்குவதில் தாமதம்
இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியதாவது:
கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், 9 நிமிட இடைவெளியில் ஒரு மின்சார ரயில் இயக்கப்படும். தற்போது, 12 நிமிடங்கள் ஆகிறது. அதுபோல், சென்ட்ரல் - ஆவடி, அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை தடத்தில் தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றது.
எனவே, பயணியர் தேவைக்கு ஏற்றார்போல், மின்சார ரயில்களை இயக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அகில இந்திய லோகோ ஓட்டும் தொழிலாளிகள் சங்கத்தின் செயலர் பாலசந்திரன் கூறுகையில், “சென்னை ரயில் கோட்டத்தில் மட்டும், 123 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஓட்டுனர் பற்றாக்குறையை நிர்வகிக்க விடுமுறை மறுப்பு, கூடுதல் ரயில்கள் வேலை வாங்க வேண்டிய சூழல் உள்ளது. கூடுதல் பணி சுமையால் ரயில் ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, புதிய ஓட்டுனர்கள் நியமனம் செய்யும் பணியை ரயில்வே விரைவுப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
விரைவில் ஓட்டுனர் பற்றாக்குறை சரிசெய்யப்படும்
சென்னை ரயில் கோட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ”ரயில் ஓட்டுனர் பற்றாக்குறையால், மின்சார ரயில் சேவையை இயக்குவதில் பெரிய பாதிப்பு இல்லை. பராமரிப்பு பணியால் சில ரயில்கள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் பணிகள் முடித்து, முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படும். அதுபோல், புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ரயில் ஓட்டுனர்களும் பயிற்சி முடித்து, பணிக்கு வரும்போது, ஓட்டுனர் பற்றாக்குறை சரிசெய்யப்படும்” என தெரிவித்தார்.






















