Chennai Rains : தொடர்ந்து பெய்யும் மழை... சென்னை விமான நிலையத்தில் குவிந்த பயணிகள்: இரண்டாவது நாளாக விமான சேவை பாதிப்பு...!
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னை விமான நிலையத்தில் இன்று இரண்டாவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
Chennai Rains : சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னை விமான நிலையத்தில்,இன்று இரண்டாவது நாளாக விமான சேவைகள் ஓரளவு பாதிக்கப்பட்டன.
பலத்த மழை
தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மழை கொட்டித் தீர்த்ததால் மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக, சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கத்தில் நேற்று 14 செ.மீ மழை பதிவாகி இருந்தது.
இதனால் விமான சேவை நேற்றில் இருந்து பாதிக்கப்பட்டன. நேற்று சென்னையில் தரையிரங்கவேண்டிய 10 விமானங்களும் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. ஓடுதளத்தில் மழைநீர் தேங்கி இருப்பதாலும், காற்றுடன் கனமழை பெய்து வருவதாலும் துபாய், தோஹா, அபுதாபி, லண்டன், ஷார்ஜா, கொழும்பு, மஸ்கட் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருக்கு நேற்று திருப்பிவிடப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக பாதிப்பு
அதைத் தொடர்ந்து, இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அதன்படி, இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து இருந்து இன்று அதிகாலை 2:10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும்,அதைப் போல் இன்று அதிகாலை 3:10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இலங்கைக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், மோசமான வானிலை காரணமாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதோடு சென்னையில் இருந்து அதிகாலை 03:30 மணிக்கு கொழும்பு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், அதிகாலை 5:05 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஆகியவைகளும் மோசமான வானிலை காரணமாக இன்று தாமதமாக புறப்பட்டு சென்றன.
அதைப்போல் லண்டனில் இருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், அபுதாபியில் இருந்து சென்னை வரும் எத்தியாட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், துபாயிலிருந்து சென்னை வரும் எமரெட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய விமானங்கள் இன்று சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னைக்கு வந்துவிட்டு, தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றன.
அதைப்போல் சென்னையில் இருந்து இன்று காலை 6 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், அதிகாலை 5:45 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய விமானங்களும் 30 நிடம் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
எச்சரிக்கை
இதற்கிடையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், வேலூர், நாகப்பட்டினம், ராணிபேட், திருப்பத்தூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், வேலூர், உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.