Chennai: "Home Work ஏன் எழுதல.." : சிறுமியை தாறுமாறாக அடித்த ஆசிரியை.. போலீசில் புகார் அளித்த தந்தை..!
வீட்டுப்பாடம் எழுதாத 4 ஆம் வகுப்பு சிறுமியை சரமாரியாக அடித்து துன்புறுத்திய தனியார் பள்ளி ஆசிரியை மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
வீட்டுப்பாடம் எழுதாத 4 ஆம் வகுப்பு சிறுமியை சரமாரியாக அடித்து துன்புறுத்திய தனியார் பள்ளி ஆசிரியை மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை கொரட்டூர் ரயில் நிலையம் அருகே எல் ஷெடாய் என்கிற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்தப்பள்ளியில் கொரட்டூரை சேர்ந்த ஐ டி ஊழியர் சத்யா என்பவரது மகள் கீர்த்தனா (10) 4 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
வழக்கம்போல் நேற்று காலை கீர்த்தனா பள்ளிக்கு சென்றுள்ளார். காலை 10 :30 மணியளவில் வீட்டு பாடத்தை சோதனை செய்த வகுப்பு ஆசிரியை பார்வதி மாணவி கீர்த்தனா தமிழ் பாடத்தில் வீட்டு பாடம் எழுதாத காரணத்தால், வகுப்பறையில் வைத்திருந்த கம்பால் வலது கால் மற்றும் இடது கையில் தாறுமாறாக அடித்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த தந்தையிடம் வகுப்பு ஆசிரியர் தன்னை பயங்கரமாக அடித்ததாக சிறுமி கூறியிருக்கிறார். இதனையடுத்து சத்யா இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட போது, அங்கிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் கொரட்டூர் காவல் நிலையம் வந்த சத்யா இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட கொரட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடம் குழந்தையை தாக்கிய ஆசிரியர் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்.