சென்னைவாசிகளே! 1 ரூபாயில் மெட்ரோ, பேருந்து, ரயிலில் இன்று முதல் போகலாம் - எப்படி?
Chennai One App: சென்னை ஒன் செயலி மூலமாக இனி சென்னையில் மெட்ரோ, பேருந்து மற்றும் மின்சார ரயில்களில் ரூபாய் 1 கட்டணத்தில் பயணிக்கலாம்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சுமார் 1 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றால் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இங்கு குடிபெயர்ந்து வசித்து வருகின்றனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சாலை மார்க்கம் மட்டுமின்றி மெட்ரோ, மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிப்பவர்களின் வசதிக்காக இணையதளம் வாயிலாகவே இவர்கள் டிக்கெட் பெற்றுக் கொள்ளும் வசதியையும் செய்துள்ளனர்.
சென்னை ஒன் செயலி:
இந்த சூழலில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மெட்ரோ, மின்சார ரயில் மற்றும் பேருந்துகள் ஆகிய மூன்றுக்கும் சேர்த்து ஒரே செயலியில் டிக்கெட் எடுக்கும் விதமாக சென்னை ஒன் என்ற செயலியை அரசு அறிமுகப்படுத்தியது. இந்த செயலி சென்னைவாசிகள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வரும் நிலையில், இந்த செயலி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஒரு ரூபாய்தான் கட்டணம்:
அதாவது, சென்னை ஒன் செயலி மூலமாக சிறப்பு சலுகை கட்டணம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இன்று முதல் சென்னை செயலியை பயன்படுத்தி வெறும் ஒரு ரூபாயில் மாநகர பேருந்து, மெட்ரோ மற்றும் மின்சார ரயில்களில் பயணிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே இந்த சலுகை பயன்படுத்திக் கொள்ளலாம். இதை யுபிஐ மூலமாக மட்டுமே செலுத்த முடியும்.
இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ள இந்த நடைமுறை பயணிகளுக்கு மிகவும் பயன் தருவதாக அமைந்துள்ளது. சென்னையைப் பொறுத்தமட்டில் மெட்ரோ, பேருந்து மற்றும் மின்சார ரயில்களில் தினசரி லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். இந்த லட்சக்கணக்கான பயணிகளுக்கு இது மிகப்பெரிய சலுகையாகவே அமைந்துள்ளது.
அதிகரிக்கும் பயன்பாடு:
இந்த சென்னை ஒன் செயலியை மெட்ரோ, பேருந்து, மின்சார ரயில்கள் மட்டுமின்றி ஆட்டோ, டாக்சிகளுக்கும் பயன்படுத்தலாம். ஆனால், ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு இந்த சலுகையை அளிக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்த இந்த செயலியை இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை இந்த செயலி மூலமாக 8.1 லட்சம் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு அளித்துள்ள இந்த சலுகை மூலமாக இந்த செயலியைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ-வில் ஏற்கனவே பயண அட்டை நடைமுறை மற்றும் செயலி நடைமுறை உள்ளது. பயண அட்டை மற்றும் செயலி பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் தொலைவைப் பொறுத்து டிக்கெட் விலை குறையும். உதாரணத்திற்கு ரூபாய் 30 டிக்கெட்டின் விலை செயலி மற்றும் அட்டையை பயன்படுத்தி பயணம் செய்தால் ரூபாய் 24 மட்டுமே கட்டணம் ஆகும்.





















