Airport-Kilambakkam Metro: விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 12 மெட்ரோ நிலையங்கள்.. விவரம் இதோ..
Chennai Airport to Kilambakkam Metro: சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான 15.3 கிலோ மீட்டர் வரையில் 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், பயணிகளின் வசதிக்காகவும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, விமான நிலையம் முதல் கோயம்பேடு பேருந்து நிலையம் வழியாக சென்ட்ரல் வரை ஒரு வழித்தடமும், விமான நிலையம் முதல் சைதாப்பேட்டை வழியாக சென்ட்ரல் சென்று வண்ணாரப்பேட்டை வரை ஒரு வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பயனடைந்துள்ளனர்.
தற்போது இந்த திட்டத்தின் அடுத்தகட்டங்கள் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் சேவையை புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை திட்டம் நீட்டிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான விரிவான மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கான அறிக்கையை தயாரித்து முடித்துள்ளது.
இதன்படி, 15.3 கிலோ மீட்டர் தொலைவிலான விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளது. இதன்படி, விமான நிலையத்திற்கு அடுத்து பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, திரு.வி.க. நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கண்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்கா மற்றும் இறுதியாக கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சென்னையின் பிரதான பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் லட்சக்கணக்கான பயணிகள் குவிவது வழக்கம். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், சென்னை நகரின் உள்ளே நெரிசல் இன்றி போக்குவரத்தை எளிதாக்குவதற்காகவும் கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய பேருந்து நிலையத்தில் ஏற்கனவே பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பாதியளவில் நிறைவு பெற்றுவிட்டது. இந்த பேருந்து நிலையத்தில் 250 பேருந்துகளும், 250 கார்களும் ஒரே நேரத்தில் நிறுத்தலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வடபழனி, விருகம்பாக்கம் வழியாக போரூர் வரையிலும், மாதவரம் வரையிலும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்