சென்னை ; சமூக வலைத்தளத்தில் போலி கணக்கு மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த நபர்
பெண்ணிற்கு சமூக வலைதளத்திலும் , வீட்டிற்கு சென்றும் திருமணம் செய்து கொள்ள தொந்தரவு கொடுத்த நபர் கைது.

இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை
சென்னை கொளத்தூரில் வசிக்கும் 25 வயது பெண் ஒருவர் பொறியியல் படித்து, 2022 - ம் ஆண்டு கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த போது அங்கு வேலை செய்து வந்த நரேஷ் என்பவர் பின் தொடர்ந்து சென்று காதலிக்க வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளார்.
போலியான பெயரில் முகநூல் கணக்கு
இது குறித்து அப்பெண் அந்நிறுவனத்தில் புகார் செய்ததின் பேரில், நிறுவனம் நரேஷை வேலையில் இருந்து நீக்கி விட்டதாகவும், பின்னர் அப்பெண் ஏகாட்டூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில், அவரது முகநூல் சமூக வலைதளத்தில் அதே நரேஷ் என்பவர் போலியான பெயரில் கணக்கு ஆரம்பித்து, மேற்படி பெண்ணிற்கு திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்துள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்
அருவருக்க தக்க வகையிலும் செய்திகள் அனுப்பி வந்ததாகவும், மேலும், நரேஷ் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் தங்களது பெண்ணை திருமணம் செய்து கொடுங்கள் என தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், கடந்த 26.11.2025 அன்று நரேஷ் , பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் வாக்குவாதம் செய்து சென்றதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் நரேஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் , பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு
கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட திரு.வி.க நகர் ஜார்ஜ் காலணி பகுதியை சேர்ந்த நரேஷ் ( வயது 35 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நரேஷ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
கவனத்தை திசை திருப்பி செல்போனை திருடிச் சென்ற நபர்.
சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் ( வயது 17 ) என்பவர் அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையிலுள்ள ஒரு மருந்து கடையில் மருந்து பொருட்களை வாடிக்கையாளர் வீட்டில் டெலிவரி செய்யும் வேலை செய்து வருவதாகவும்,
கடந்த 23 ம் தேதி அன்று இரவு அயனாவரம் ஆன்டர்சன் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் மருந்து பொருட்களை டெலிவரி செய்து விட்டு திரும்ப கடைக்கு செல்லும் போது, அங்கு வந்த ஒரு இளைஞர் அவசரமாக பேச வேண்டும் உங்களது செல்போனை கொடுங்கள் என ஜெகதீஷிடம் கேட்டபோது ஜெகதீஷ் செல்போனை கொடுத்ததாகவும், அந்த நபர் செல்போனில் பேசியவாறே நடந்து சென்று அங்கு வந்த அவரது நண்பரின் இருசக்கர வாகனத்தில் வேகமாக ஏறி தப்பிச் சென்றார்.
இது குறித்து ஜெகதீஷ் அயனாவரம் காவல் நிலைய குற்றப் பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அயனாவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட புளியந்தோப்பு பகுதிகளை சேர்ந்த தினேஷ் ( வயது 20 ) மற்றும் சுதர்சன் ( வயது 20 ) ஆகிய 2 நபர்களை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை மார்க்கெட் அருகில் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து புகார் தாரரின் செல்போன் மீட்கப்பட்டு, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.






















