காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னையில் சாரல் மழை..! கொளுத்தும் கோடையில் குளுகுளு சர்ப்ரைஸ்..!
காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலையிலிருந்து லேசான சாரல் மழை பெய்து வருகிறது.
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "அசானி" புயல் தீவிர புயலாக வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவியது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்துஇன்று (10.05.2022) வட ஆந்திரா - ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும். அதன்பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் ஒரிசா கடற்கரை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக புயலாக வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
நேற்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டது அதன் அடிப்படையில் தேனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மிதமான சூழலுடன் கூடிய மழை பெய்தது. அதேபோல நேற்று நள்ளிரவு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னையின் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இந்நிலையில் இன்று 10.05.2022, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11.05.2022 முதல் 13.05.2022 வரை: வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை முதலே சென்னை புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு, நுங்ககம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்துள்ளது. திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, ராயபுரம், கே.கே.நகர், எழும்பூர், தி.நகர், பாலவாக்கம், நுங்கம்பாக்கம் பகுதியில் மழை . அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தின் கடுமையில் சிக்கித் தவித்த மக்கள் நள்ளிரவில் பெய்த மழையால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அதேபோல காஞ்சிபுரம் காலையிலிருந்து தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் வாலாஜாபாத்,பூக்கடை சத்திரம், பொண்ணெரிகரை, மேட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதேபோல செங்கல்பட்டில் நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் காலையில் இருந்து சாரல் மழை பெய்து வருகிறது .செங்கல்பட்டு வேதாசலம் நகர் மதுராந்தகம் கருங்குழி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் .கடந்த சில வாரங்களாக காலை முதலே கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்