267 கிலோ தங்க கடத்தல் விவகாரம்... திடீர் திருப்பங்கள்.. கடத்தல் கும்பல் தலைவன் யார் ?
சென்னை விமான நிலையத்தில், இரண்டு மாதங்களில், 267 கிலோ கடத்தல் தங்கம், சுங்கச் சோதனை இல்லாமல், வெளியே எடுத்துச் சென்று, 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், பரபரப்பான திடீர் திருப்பங்கள்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக துபாய், சார்ஜா, குவைத், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட கடத்தல் தங்கங்கள் பெருமளவு, குறிப்பாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில், சுங்கச் சோதனைகள் இல்லாமல் கடத்திச் செல்லப்பட்டனm
267 கிலோ தங்கம் கடத்தல்
இந்த இரண்டு மாதங்களில், ரூ. 167 கோடி மதிப்புடைய, 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டன. ஆனால் இந்த கடத்தல் தங்கம் ஒன்றுக்கு கூட சுங்கச் சோதனை நடத்தப்படவும் இல்லை, சுங்க அதிகாரிகள் கைப்பற்றவும் இல்லை. அனைத்து தங்கங்களும் ஒட்டு மொத்தமாக, சுங்கச் சோதனை இல்லாமல் கடத்தல் ஆசாமிகள் வெளியில் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த கடத்தல் சம்பவங்கள் குறிப்பாக டிரான்சிட் பயணிகள் மூலமாகவே நடந்துள்ளன.
பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை
இந்நிலையில் ஜூன் மாதம் கடைசி வாரத்தில், துபாயிலிருந்து சென்னை வழியாக, இலங்கை செல்லவிருந்த ஒரு இலங்கை பயணியை, ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்தப் பயணி துபாயிலிருந்து கடத்தி வந்த தங்கத்தை, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றின், ஊழியர்கள் மூலமாக, விமான நிலையத்தை விட்டு வெளியே, சுங்கச் சோதனை இல்லாமல், எடுத்துச் செல்ல வைத்துவிட்டு, இலங்கை பயணி, மற்றொரு விமானத்தில் சென்னையில் இருந்து, இலங்கை செல்ல முயன்றார்.
ஒன்பது பேர் கைது
அதோடு இந்த கடத்தல் சம்பவங்கள் அனைத்திற்கும், சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்கும் கடையை நடத்தும் யூடியூப்பர் சபீர் அலியும், அவருடைய கடையில் பணியாற்றும் 7 ஊழியர்களும், உடந்தை என்று தெரிய வந்தது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள், சபீர் அலி, கடை ஊழியர்கள் 7 பேர், இலங்கை பயணி ஒருவர் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஒரு கோடி ரூபாய் டெபாசிட்
அப்போது சபீர் அலி இந்த பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை, புதிதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கினார் என்றும் தெரிய வந்தது. இந்த கடையை சபீர் அலி, வித் வேதா பி ஆர் ஜி என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து, சுமார் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செலுத்தி, வாடகைக்கு எடுத்து இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் 267 கிலோ தங்கம் கடத்தல் சம்பவத்தில், கைது செய்யப்பட்டிருக்கும் யூடிப்யூபர் சபீர் அலி, இலங்கை கடத்தல் பயணி, இருவர் மீதும் சுங்கத்துறை அதிகாரிகள், காப்பி போசோ சட்டத்தை பாய்த்துள்ளனர். அந்த காபி போசோ சட்டத்தில், ஜாமினில் வெளியில் வர முடியாத படி, சிறையில் அடைத்துள்ளனர்.
சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை
சுங்க அதிகாரிகள், இருவர் மீதும் உள்ள, குற்றச்சாட்டு நகல்கள், 486 பக்கங்களையும், தமிழில் மொழிபெயர்த்து, நகல்கள் எடுத்து, இருவருக்கும் வழங்கப்பட்டன. அதோடு இவர்கள் மீது போடப்பட்டுள்ள காப்பி போசோவை, அதற்கான கமிட்டி ஆய்வு செய்து உறுதி செய்து விட்டால், கள்ளக் கடத்தல் மூலம் சேர்த்த, சொத்துகளை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடத்தல் கும்பல் தலைவன் தலைமறைவு
சபீர் அலி பரிசு பொருட்கள் கடை வாடகைக்கு எடுப்பதற்கு, ரூபாய் ஒரு கோடி டெபாசிட் பணம் கட்டியதில், பெரும் பங்கை அந்த கடத்தல் கும்பல் தலைவன் தான், சபீர் அலிக்கு கொடுத்து உதவி உள்ளார் என்றும் தெரிய வந்தது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள், இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 9 பேர் தவிர, பத்தாவது நபராக, அந்தக் கடத்தல் கும்பல் தலைவனையும், சேர்த்துள்ளனர். ஆனால் கடத்தல் கும்பலின் தலைவன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.