சென்னையில் குறையத் துவங்கும் கொரோனா பாதிப்பு!
சென்னையில் கொரோனா நோய்த் தொற்று குறையத் தொடங்கியுள்ளது. சோழிங்கநல்லூர் மண்டலத்தைத் தவிர்த்து சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் 7 நாள் கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் சரிந்துள்ளது.
சென்னையில் கொரோனா நோய்த் தொற்று குறையத் தொடங்கியுள்ளது. சோழிங்கநல்லூர், அம்பாத்தூர் ஆயா இரு மண்டலங்களைத் தவிர்த்து சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் 7 நாள் கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் சரிந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, சென்னையின் 7 நாள் கூட்டு வளர்ச்சி விகிதம் (CAGR) 2.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் அமல்படுத்தப்பட்ட கடுமையான ஊரடங்கு காரணமாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், சென்னையில் ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாடு 91.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. சென்னையில் தற்போது 2120 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சைப் படுக்கைகளின் பயன்பாடு 99.2 சதவிகிதமாக உள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 5559 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது, 49,236 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், சென்னையில் 10 லட்சம் மக்கள் தொகையில் சராசரி 6,276 பேருக்கு கொரோன நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை 5,129 ஆக உள்ளது.
சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு வி.க நகர் , மாதவரம், அடையார், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் கடந்த ஏழு நாட்கள் தொற்று பாதிப்பு வளர்ச்சி விகிதம் நெகட்டிவாக உள்ளது. அதாவது, முந்தைய 7 நாட்களுடன் ஒப்பிடுகையில் ( 11- 16) தற்போது கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் சரிந்துள்ளது.
குறிப்பாக, திரு வி.க நகரில் இந்த முன்னேற்றம் நன்கு காணப்படுகிறது. கடந்த ஏழு நாட்களில் புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகமாக உள்ளது. கடந்த 16ம் தேதியன்று திரு வி.க நகரில் 3859 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 3525 ஆக குறைந்துள்ளது.
சென்னையின் 7 நாள் சராசரி பாதிப்பு வளர்ச்சி எண்ணிக்கை (-) 2.4 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதத்தை விட 9 மண்டலங்களில் 7 நாள் பாதிப்பு வளர்ச்சி கூடுதலாக உள்ளது.
ஆலந்தூர் ( -2.2), தேனாம்பேட்டை (2.1%) , மணலி, திருவொற்றியூர், பெருங்குடி , வளசரவாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 9 மண்டலங்களில் கொரோனா பாதிப்பின் 7 நாள் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.
கவலையளிக்கும் அம்பத்தூர், சோழிங்கநல்லூர்:
சென்னையில் அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய இரண்டு மண்டலங்களில் கடந்த 7 நாள் பாதிப்பு வளர்ச்சி விகிதம் பாசிட்டிவாக உள்ளது.
அம்பத்தூர் மண்டலத்தில் கடந்த ஏழு நாட்களில் மட்டும் 56 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கடந்த 16ம் 4390 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 5,139 ஆக அதிகரித்துள்ளது. அதன், இறப்பு விகிதம் 1.22% ஆக உள்ளது.
சென்னை தடுப்பூசி நிலவரம்:
சென்னை பெருநகராட்சியில் 12 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இரண்டாம் டோஸ் போடப்பட்டுள்ளது. அதாவது, சென்னை மக்கள் தொகையில் 10.57% பேர் இரண்டாம் டோஸ் போட்டுள்ளனர்.