சென்னை ; பாதுகாப்பு கம்பி இல்லாததால் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
அடுக்குமாடி குடியிருப்பில் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஐன்னல் வழியாக எட்டி பார்த்ததால் சோகம்
செங்கல்பட்டு அருகே உள்ள புலிப்பாக்கத்தில் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த நவீன். இவரது பெற்றோர் இருவரும் மென்பொருள் பொறியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
சிறுவனின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், பாட்டியின் பராமரிப்பில் அவன் இருந்துள்ளான். வீட்டில் ஜன்னல் அருகே இருந்த படுக்கையில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நவீன், எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
பாதுகாப்பு கம்பிகள் இல்லை
இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், எட்டாவது மாடியில் உள்ள அந்த வீட்டின் ஜன்னல்களில் பாதுகாப்பு கம்பிகள் பொருத்தப்படவில்லை என்பதும், ஜன்னல் கதவுகள் குழந்தைகள் எளிதில் திறக்கும் வகையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனின்றி போனது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் பெயிண்டர் தவறி விழுந்து உயிரிழப்பு
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷமீம் ( வயது 45). இவர் புளியந்தோப்பு திரு.வி.க நகர் நான்காவது தெருவில் பெயிண்டிங் வேலை கடந்த நான்கு நாட்களாக செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் , இரண்டாவது மாடியில் கயிற்றில் தொங்கியபடி பெயிண்டிங் அடித்து வந்த போது, அவர் தவறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் தலை மற்றும் இரண்டு கால்கள் பலத்த காயம் ஏற்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இச்சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்





















