Chennai - Bangalore Expressway: சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலைக்கு என்னாச்சு ? தொடரும் தலைவலி.. பணிகள் எப்போது முடியும்?
Chennai Bangalore Expressway Latest News: சென்னை - பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இரண்டும் மிக முக்கிய நகரமாக இருந்து வருகிறது. இந்த இரண்டு நகரங்களையும் இணைக்கக்கூடிய முக்கியச்சாலையாக, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. இந்த சாலையில் தற்போது பெங்களூருக்கு, செல்ல வேண்டுமென்றால் 7 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறது.
சென்னை - பெங்களூர் அதிவிரைவு சாலை Chennai - Bangalore Expressway
சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையே ஏராளமான தொழில் போக்குவரத்தும் இருந்து வருகிறது. மிக நீண்ட தூர பயணம் என்பதால், நேர விரயம் மற்றும் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பயண நேரத்தை குறைப்பதற்காக விரைவுச் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை ஸ்ரீபெரும்புதூரிலிருந்து, சுங்குவார்சத்திரம், கோவிந்தவாடி மற்றும் ராணிப்பேட்டை வழியாக பெங்களூருக்கு அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் முக்கிய நோக்கம், பெங்களூருக்கு செல்லும் நேரத்தை பெரும் அளவு குறைப்பது தான். இந்த சாலை முழுமையாக பயன்பாட்டிற்கு வந்தால், சென்னையிலிருந்து 4 மணி நேரத்தில் பெங்களூருக்கு செல்ல முடியும். இந்த சாலை 7406 கோடி ரூபாய் மதிப்பிற்கு அமைக்கப்பட்டு வருகிறது.
முடிவுற்ற பணிகளின் விவரம்
சித்தூர் முதல் ராணிப்பேட்டை வரை 24 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது. இதில் 22 கிலோமீட்டர் சாலை அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து திருவள்ளுவர் வரை 32 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க வேண்டும். தற்போது இருபது கிலோமீட்டர் தூரத்திற்கான சாலை முழுமை பெற்றுள்ளது.
வாலாஜாபாத் முதல் அரக்கோணம் வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட வேண்டும். இதில் 24 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் முதல் சோளிங்கர் வரை 26 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்கப்பட வேண்டும். அதில் 11 கிலோ மீட்டருக்கு சாலை தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
பணிகள் தாமதத்திற்கு காரணம் என்ன ?
ராணிப்பேட்டை சோளிங்கர் முதல் காஞ்சிபுரம் பரந்தூர் வரை கடந்த மார்ச் மாதம் இறுதியில், சாலை பணிகளை முழுமையாக முடித்திருக்க வேண்டும். ஆனால் தற்போது 25 கிலோ மீட்டர் தூர சாலை அமைக்க வேண்டிய நிலையில், 11 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. 450 கோடி ரூபாய் தற்போது செலவிடப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பணிக்காக 550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கோவிந்தவாடி, காட்டுப்பட்டூர், மகேந்திரவாடி, உளிய நல்லூர் ஆகிய ஏரிகளில் தண்ணீர் இருப்பதால் தூண்கள் அமைக்கும் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. அவை இணை பணிகள் இன்னும் நடைபெறாமல் இருக்கிறது. இதனால் பணிகள் நிறைவடையாமல் இருப்பதால் ஓர் ஆண்டுகளுக்கு பணிகளை நீட்டித்து, நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கி உள்ளது .
பணிகள் முடிவடைவது எப்போது ? Chennai Bangalore Expressway Date
கோடைகாலம் தொடங்கி இருப்பதால் ஏரியில் நீர் வற்ற தொடங்கியுள்ளது. இதன்பிறகு கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை - பெங்களூர் விரைவுச்சாலை பயன்பாட்டிற்கு வருவது, தாமதம் ஆகி வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக, பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






















