“சென்னை டூ பெங்களூர் சர்ர்ர்னு போகலாம்” 160 கி.மீட்டரில் சூப்பர் ரயில்..!
"சென்னை - பெங்களூர், சென்னை - ஐதராபாத் வழித்தடங்களில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது"

தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களாக இருக்கக்கூடிய சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய வழித்தடங்களில் செல்லும் ரயில்களை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்குவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் முக்கிய நகரங்கள்
தென்னிந்தியாவில் முக்கிய நகரங்களாக சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்கள் இருந்து வருகின்றன. அதிக அளவு வேலைவாய்ப்புகளும் இந்த நகரங்கள் மற்றும் இந்த நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளிலே குவிந்திருக்கின்றன. பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையைத் தேடி, பெங்களூர், சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு படை எடுப்பதும் அதிகரித்து.
அதேபோன்று இந்த நகரங்கள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருவதால், இந்த மூன்று நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நகரங்களுக்கு இடையே மிக வேகமாக, செல்வதற்கான போக்குவரத்து கட்டமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இறங்கியுள்ளன. அந்த வகையில் சென்னை - பெங்களூர் மற்றும் ஹைதராபாத் வழித்தடங்களில் 160 கிலோமீட்டர் வேகத்தில், ரயில்களை இயக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திட்ட அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் என்ன ?
ரயில்வே துறை சார்பில் முக்கிய வழித்தடங்களில், ரயில் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என அனைத்து ரயில் மண்டலங்களுக்கும் ரயில்வே துறை அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் ரயில்கள் 160 கிலோமீட்டர் வேகத்திற்கு செல்லும் வகையிலான, கட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை -ஜோலார்பேட்டை - பெங்களூர் வழிதடத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று ஹைதராபாத் - சென்னை ரயில் வழித்தடமும் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணம் நேரம் மிக வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்ட அறிக்கையில் என்னென்ன இருக்கும் ?
இந்த திட்ட அறிக்கையில் மொத்த தூரம், தற்போது ரயில்கள் செல்லும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வேகம் என்ன, வளைவு பகுதிகள் ஏதாவது உள்ளதா, புதுப்பிக்க வேண்டிய பாலங்கள் என்னென்ன ?, பாதுகாப்பு சுவர்கள் அதேபோன்று சிக்னல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம்பெற்று இருக்கும்.
இந்த திட்ட அறிக்கை ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பின் அடுத்த கட்டப் பணிகள் துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்ட அறிக்கை தயார் செய்த பிறகு மூன்று ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை அனைத்து பணிகளும் முடிவடைய நேரம் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















