chennai: வட்டிக்கு வாங்கி வட்டி பிஸினஸ்! அதிகரித்த கடன் தொல்லை!! குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற நபர்!
கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறு குறு தொழிலாளர்கள் மற்றும் பெரும்பாலான பொதுமக்கள் வட்டிக்கு பணம் வாங்கி அதை வைத்தே தங்களுடைய பணத்தேவை பூர்த்தி செய்கின்றனர். அப்படி வாங்கும் பணத்திற்கு வட்டி மற்றும் தொகை ஆகிய இரண்டையும் திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் அதற்கு பின் அவர்கள் மிகுந்த துயரத்தை சந்தித்து வருகின்றனர். அதில் ஒருசிலர் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் விபரீத முடிவுகளையும் எடுத்து வருகின்றனர். அப்படி ஒருவர் குடும்பத்துடன் எடுத்த விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வடிவேல்(42). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராஜி(38) என்ற மனைவியும், ஜிவிதா(13) என்ற மகளும் இருக்கின்றனர். இவர் வட்டிக்கு வாங்கிய பணத்தை மேல் வட்டிக்கு விடும் வேலையையும் பார்த்து வந்துள்ளார். இதற்காக அவர் தன்னுடைய நண்பர்களிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக தெரிகிறது.
கொரோனா காலத்தில் இவர் வட்டிக்கு பணம் கொடுத்த நபர்கள் திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளனர். இதன்காரணமாக வடிவேலுக்கு வட்டிக்கு பணம் கொடுத்த நபர்கள் மீண்டும் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அத்துடன் வட்டியை திருப்பி செலுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பணம் அளிக்க முடியாமல் வடிவேலு மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தச் சூழலில் திடீரென்று இவர் தன்னுடைய தங்கைக்கு ஒரு வீடியோவை வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார். அதில் கடன் பிரச்னை காரணமாக அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இதை பார்த்த அவருடைய தங்கை உடனடியாக விரைந்து விருகம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அவர்கள் அனைவரும் எலி மருந்து சாப்பிட்டு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி இருந்துள்ளனர். அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். உரிய நேரத்தில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதால் ஆபத்தான நிலையிலிருந்து காப்பாற்றாப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரின் தற்கொலை முயற்சி தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடன் தொல்லையால தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் படிக்க:இன்ஸ்டாவில் ஆசை வலை! செக்ஸுக்காக மாஸ்டர் ப்ளான்.. 15வயது சிறுவனை டார்கெட் செய்து சிக்கிய பெண்!