(Source: ECI/ABP News/ABP Majha)
Chembarambakkam Lake : இரவில் வெளுத்து வாங்கும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன?
chembarambakkam lake level : மழைக்கு எதிரொலியாக செம்பரம்பாக்கம் பகுதியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காஞ்சிபுரத்தில் கனமழை ( Kanchipuram Rain )
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை நேரங்களில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவு முழுவதும் விட்டு விட்டு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டு நாட்களாக இரவில் மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்க துவங்க உள்ளது.
காஞ்சிபுரத்தில் பெய்த மழையின் அளவு ?
நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6மணி வரை பெய்த மழை அளவு ?
காஞ்சிபுரம் 23.20 மில்லி மீட்டர் மழை
உத்தரமேரூரில் 51 மில்லி மீட்டர்
வாலாஜாபாத் பகுதியில் 32.80 மில்லி மீட்டர்
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 72மில்லி மீட்டர்
குன்றத்தூர் பகுதியில் 10 மில்லி மீட்டர்
செம்பரம்பாக்கத்தில் 26.40 மில்லி மீட்டர்
அதிகபட்சமாக உத்தரமேலூரில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 21 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
செம்பரம்பாக்கம் பகுதியில் மழை
நேற்று செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 278 கனஅடியாக இருந்தது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் பகுதியில் 26.40 மில்லி மீட்டர் மழை பெய்ததால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 775 கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியில் நீர் இருப்பு 20.39 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3.6 டிஎம்சி நீர் தேக்கி வைக்க முடியும், தற்பொழுது நீர் இருப்பானது 2.7 டிஎம்சி ஆக உள்ளது. மெட்ரோ சிப்காட் உள்ளிட்ட தேவைக்காக 138 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போன்று சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பல்வேறு ஏரிகளிலும் தேவையான அளவு தண்ணீர் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை நிலவரம் எப்படி இருக்கும்..?
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில் வருகின்ற 27 மற்றும் 28ம் தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல், வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 27ம் தேதி தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தொடர்ந்து, அரபிக்கடல் பகுதிகளில் வருகின்ற 27ம் தேதி இலட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.