சென்னை விமான நிலையத்தில் நடந்த விபத்து - இதனால் இவ்வளவு பாதிப்பா ?
சென்னை- திருச்சி- சென்னை இடையே இயக்கப்படும், 8 விமான சேவைகள், நேற்றும் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த, ஏ டி ஆர் எனப்படும் சிறிய ரக விமானத்தின் மீது, சரக்கு வேன் உராய்ந்த விபத்தில், விமானத்துக்கு லேசான சேதம் ஏற்பட்டது. இதை அடுத்து அந்த விமானம் வானில் பறக்க, விமான பாதுகாப்பு அமைப்பான பி சி ஏ எஸ் மற்றும் டி ஜி சி ஏ தடை விதித்துள்ளதால், சென்னை- திருச்சி- சென்னை இடையே இயக்கப்படும், 8 விமான சேவைகள், நேற்றும் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை ( Chennai Airport ) : சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, ஞாயிறு அன்று இரவு, இண்டிகோ ஏர்லைன்ஸ் ஏ டி ஆர் ரக, பயணிகள் விமானம், அது நிற்க வேண்டிய நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் விமானத்தில் சரக்குகளை கையாளும் ஒரு வாகனம் வந்தது, விமானத்தின் மீது லேசாக உராய்ந்து, சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் விமானம் லேசாக சேதம் அடைந்துள்ளது. இந்தநிலையில், பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி எனப்படும், பி.சி.ஏ எஸ் விமான பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து, ஆய்வு செய்தபோது, இந்த விமானம் மீண்டும் உடனடியாக பறப்பதற்கு தகுதியற்றது என்று கூறி, விமானத்தை இயக்க அனுமதி மறுத்துவிட்டனர். அதோடு டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன் எனப்படும், டி ஜி சி ஏ விற்கும் தகவல் அளித்தனர்.இதை அடுத்து, டி.ஜி.சி. ஏ இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, குறிப்பிட்ட அந்த விமானம், மறு உத்தரவு வரும் வரை, பறப்பதற்கு தடையும் விதித்தது.
8 விமானங்களும் ரத்து
இதற்கிடையே இந்த விமானம் திருச்சிக்கு இயக்கப்பட்டு வந்த அந்த ஏ.டி.ஆர் ரக விமானம். அந்த விமானம் இன்று காலை சென்னை விமான நிலையத்தில், ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதை அடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமான நிறுவனம், தினமும் திருச்சி செல்லும், 4 விமானங்களையும், திருச்சியில் இருந்து சென்னை வரும் 4 விமானங்களையும், 8 விமானங்களை இன்று ரத்து செய்தது. அதைப்போல் நாளை செவ்வாய்க்கிழமையும் இந்த 8 விமானங்களும் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமான நிறுவனம் ரத்துக்கான காரணத்தை தெளிவாக அறிவிக்காமல், நிர்வாக காரணம் என்று கூறிவிட்டது.
இப்போது விபத்துக்குள்ளாகியுள்ள இந்த ஒரே ஏடிஆர் ரக விமானமே, சென்னை- திருச்சி- சென்னை இடையே, தினமும் இயங்கி வந்ததால், வேறு வழியின்றி, திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்கள் திருச்சி செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமானம் முழுமையாக பழுதுபார்க்கப்பட்டு, மீண்டும் வானில் பறப்பதற்கு, பி சி ஏ எஸ் மற்றும் டிஜிசிஏ அனுமதி பெற்ற பின்பு தான்,அந்த விமானம் மீண்டும் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஆனால் இந்த சம்பவம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் உள்ள டி ஜி சி ஏ இதுகுறித்து, விசாரணைக்கு உத்தரவிட்ட பின்பு தான், இந்த தகவல் வெளியில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில், யாருக்கும் காயமோ பாதிப்போ ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமோ, சென்னை விமான நிலைய நிர்வாகமோ இதுவரையில், முறைப்படி போலீசில் புகார் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.