Bramhotsavam Vyasarpadi : சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில் தேர் திருவிழா... ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு....
சென்னை வியார்சர்பாடி ரவீஸ்வரர் கோவில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
வடசென்னை வியாசர்பாடியில் பிரசித்தி பெற்ற மரகதாம்பாள் உடனுறை ரவீஸ்வரர் கோவில் உள்ளது. வியாசர்பாடியில் உள்ள மூர்த்தங்கர் தெருவில் அமைந்துள்ள இக்கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த ஜூன் 14 ஆம் தேதி தொடங்கியது. இதனையொட்டி, தினமும் சுவாமிக்கு ஏராளமான பூஜைகள் நடத்தப்பட்டு, சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ரவீஸ்வரர் மற்றும் மரகதாம்பாள் சுவாமிகள் அலங்காரத்துடன் தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் எருக்கஞ்சேரி மேட்டுச்சாலை, வியாசர்பாடி சந்தை, பாலகிருஷ்ணன் தெரு போன்றவற்றின் வழியாகச் சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது .
இந்த தேரோட்டத்தின் போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் பெரம்பூர் எம்.எல்.ஏ திரு.ஆர்.டி. சேகர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் , உதவி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேரோட்டத்தின் ஊர்வலம் முழுவதும், பக்தர்கள் ஆரத்தி எடுத்து, தேங்காய் உடைத்து சுவாமியை வழிபட்டனர். தேரை வரவேற்கும் விதமாக சிவனடியார்கள் திருநடனம், சிறுவர் சிறுமியர் சிலம்பாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வுகளான பஞ்சமூர்த்தி திருக்கல்யாண உற்சவம் வரும் 25ஆம் தேதி இரவும், புஷ்பபல்லக்கு 26ஆம் தேதியும் நடக்கிறது. வரும் 27ஆம் தேதி மாலை 7 மணிக்கு விடையாற்றி நிகழ்வுடன் ஆண்டு பெருவிழா நிறைவு பெறும்.
இந்த கோவில் உருவானது குறித்து ஒரு வரலாற்று கதை உள்ளது. அதன்படி, ”சூரிய பகவானின் மனைவி பெயர் சமுக்ஞாதேவி. இவளால், சூரியனின் வெப்பத்தை தாங்க முடியவில்லை. இதனால் தன்னுடைய நிழலைப் பெண்ணாக வடித்து, சூரியனிடம் விட்டு விட்டு, தன்னுடைய தந்தையின் இருப்பிடம் சென்று விட்டாள். நிழலில் இருந்து உருவான பெண்ணிற்கு ‘சாயாதேவி’ என்று பெயர். இதையறிந்த சூரியன், மனைவி சமுக்ஞாதேவியைத் தேடிச் சென்றார். வழியில் பிரம்மா ஒரு யாகத்தை நடத்திக் கொண்டிருந்தார். சூரியன் மனைவியைத் தேடும் மனநிலையில் இருந்ததால் பிரம்மாவை கவனிக்கவில்லை. ஆனால், பிரம்மாவோ சூரியன் தன்னை அவமதித்து விட்டதாக நினைத்து, அவரை மனிதப் பிறப்பெடுக்கும்படி சாபம் அளித்தார்.
இந்த சாபம் நீங்க நாரதரிடம் ஆலோசனைக் கேட்டார், சூரியன். அவர் சொன்ன ஆலோசனைபடி, சென்னை வியாசார்பாடியில் உள்ள தலத்திற்கு வந்த சூரியன், வன்னி மரத்தடியில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பல நாள் பூஜைக்குப் பிறகு, சிவபெருமான் சூரியனுக்கு காட்சியளித்தார். அதோடு சூரியனுக்கு சாப விமோசனத்தையும் வழங்கினார். சூரியனுக்கு விமோசனம் அளித்தவர் என்பதால் ‘ரவீஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார். சூரியனுக்கு ‘ரவி’ என்ற பெயரும் உண்டு. இந்தக் கோவிலில் கிழக்கு நோக்கி வீற்றிருந்து சிவபெருமான் அருள்பாலிக்கிறார்”. இவ்வாறு வரலாற்று கதையில் கூறப்பட்டுள்ளது.