4000 கோடி ரூபாய் மோசடி வழக்கு: சுரானா குழுமத்தின் இயக்குனர் ஜாமீன் மனு தள்ளுபடி
வங்கிகளில் 4000 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் கைதான சுரானா குழுமத்தின் இயக்குனர் உள்ளிட்ட மூன்று பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
வங்கிகளில் 4000 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் கைதான சுரானா குழுமத்தின் இயக்குனர் உள்ளிட்ட மூன்று பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுரானா குழுமத்தில் உள்ள சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட் ஆகியவை ஐடிபிஐ வங்கியிடமிருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியிடமிருந்தும் பெற்ற, 4000 கோடி ரூபாய் அளவிற்கான கடனை செலுத்தாமல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த நிறுவனங்களுக்கு எதிராக பெங்களூரு சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், அந்த தொகையை சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக கூறி நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ஊழியர்கள் பி. ஆனந்த் மற்றும் ஐ. பிரபாகரன் ஆகியோர் மீது அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் ஜூலை 13ஆம் தேதி நல்வரும் கைது செய்யப்பட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தினேஷ் சந்த் சுரானா, பி. ஆனந்த் மற்றும் ஐ. பிரபாகரன் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி எஸ். அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், கைதுக்கு முன்பாக முறையாக நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்கவில்லை என்றும், தீவிர குற்றம் என வகைப்படுத்திவிட்டு அமலாக்கத் துறை விசாரிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு, ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
அமலாக்கத் துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி அமலாக்கத் துறை என்பதை காவல்துறை இல்லை என்பதால் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்கவில்லை என்றும், கைது செய்த போது காரணங்களை கூறி அதில் மனுதாரர்கள் கையெழுத்திட்டதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாலும், 3986 கோடியே 8 லட்ச ரூபாய் தொடர்புடைய முறைகேடு என்பதாலும் ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, பெரிய அளவிலான தொகை, மனுதாரர்களின் நேரடி தொடர்பு, அமலாக்கத் துறை மேலும் பல ஆவணங்களை திரட்ட வேண்டிய அவசியம், ஆதாரங்களை அழிக்கவும், சாட்சியங்களை கலைக்கவும் வாய்ப்பு போன்ற காரணங்களால் ஜாமீன் வழங்க முடியாது என கூறி, மூவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்