புதிய வீடு கட்டும் கனவா? எம்-சாண்ட் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்! விரிசல் ஏற்படாமல் இருக்க இதை தெரிஞ்சிக்கோங்க!
தற்போதயை சூழலில் ஆற்று மணல் கிடைக்காததால் , கட்டிடம் கட்டுவதற்கு எம் - சாண்ட் மண் தான் பயன்படுத்தப்படுகிறது.

புதிய வீடு - பொருட்கள் விஷயத்தில் கவனம்
புதிதாக வீடு கட்டுவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகளை துவக்கும் நிலையில், பொருட்கள் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். தற்போதைய சூழலில் கட்டுமான பணிகளுக்கு ஆற்று மணல் முறையாக கிடைப்பது இல்லை என்பதால், எம் - சாண்ட் பயன்பாடு அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழல் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் போதிய எண்ணிக்கையில் ஆற்று மணல் குவாரிகள் இயக்கப்படுவது இல்லை. இதனால், கட்டுமான பணிகளுக்கு ஆற்று மணல் கிடைப்பது முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதை வெளிப்படையாக உணர முடிகிறது.
எம் - சாண்ட் விஷயத்தில் மிகுந்த விழிப்புணர்வு
இத்தகைய சூழலில், கட்டுமான பணிகளுக்கு எம் - சாண்ட் பயன்படுத்தலாம் என்றும் அதை ஊக்குவிக்கும் வகையில், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் புதிய வீட்டுக்கான கட்டுமான பணிகளை துவக்குவோர் அதற்கு எம் - சாண்ட் வாங்கும் விஷயத்தில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் 450க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முறையாக எம் - சாண்ட் தயாரிப்பதற்கான அனுமதியை பெற்றுள்ளன. உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணிக்கு வரும் எம் - சாண்ட் முறையாக உரிமம் பெற்ற நிறுவனத்தின் தயாரிப்பு தான் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஆனால் , பெரும்பாலான இடங்களில் எம் - சாண்ட் தேவை என்று கூறினால் போதும் , அதற்கான லோடு வந்து விடும் என்று மக்கள் நினைக்கின்றனர். உண்மையில் நீங்கள் கொடுத்த ஆர்டர் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட லோடு உண்மையான எம் -சாண்ட் தானா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.
விரிசல்கள் ஏற்பட வாய்ப்பு
முறையாக தயாரிக்கப்படும் எம் - சாண்ட் உரிய வழிமுறைகளின் அடிப்படையில் கழுவப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். சில இடங்களில் கிரஷர்களின் துகள்களை லாரியில் ஏற்றி அதில் அதிக அளவில் தண்ணீர் கொட்டி அனுப்பி விடுகின்றனர். இதை பயன்படுத்தினால் , கட்டடம் உறுதியாக இருப்பதற்கு பதிலாக அதில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது மட்டுமல்லாது, பூச்சு வேலை உள்ளிட்ட நிலைகளில் தயாரிக்கப்படும் கலவையில் சிமென்ட், எம் - சாண்ட் ஒரே நிறத்தில் இருப்பதால் அளவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட வேலைக்கான கலவை தயாரிப்பில் எம் - சாண்ட் , அதற்கான வரையறுக்கப்பட்ட அளவில் மட்டுமே இருக்க வேண்டும். எம் - சாண்ட் அளவு அதிகமாகும் நிலையில் கலவையில் உறுதி தன்மை இரு இருக்காது. சுவர்களில் விரிசல்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.






















