மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவு ரத்து
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவு ரத்து. நான்கு வாரங்களில் பல்கலைக்கழக மானியக்குழு சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்.
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக நான்கு வாரங்களில் சுதந்திரமாக உத்தரவு பிறப்பிக்கும்படி பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி மற்றும், ஈரோட்டைச் சேர்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரிகள், தன்னாட்சி அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், பல்கலைக்கழக மானியக்குழுவுக்கும் விண்ணப்பித்தன.
இந்த இரு விண்ணப்பங்களையும் பரிசீலித்த அண்ணா பல்கலைக்கழகம், தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதற்கான அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து உத்தரவிட்டது. அந்த உத்தரவு பல்கலைக்கழக மானியக்குழுவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து இரு கல்லூரிகள் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார்.
அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிகளுக்கு எந்த சட்ட வலுவும் இல்லை என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும், தன்னாட்சி அந்தஸ்து வழங்க பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் கல்லூரிகள் சார்பில் வாதிடப்பட்டது.
ஆனால், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின் அடிப்படையில் தான் அண்ணா பல்கலைக்கழக விதிகளும் வகுக்கப்பட்டுள்ளது எனவும், தன்னிச்சையாக அண்ணா பல்கலைக்கழகம் எந்த விதிகளையும் வகுக்கவில்லை எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில், தன்னாட்சி அந்தஸ்து கோரிய விண்ணப்பங்களை ஏற்றோ அல்லது மறுத்தோ அண்ணா பல்கலைக்கழகம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும், பல்கலைக்கழக மானியக்குழு சுதந்திரமாக ஆய்வு நடத்தி, அதன் அடிப்படையில் தான் தன்னாட்சி அந்தஸ்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தின் பரிந்துரை கோரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது தொடர்பான அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிகளுக்கு எந்த சட்ட வலுவும் இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அந்த விதிகளை மட்டுமே, தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதற்கான அடிப்படையாக கருத முடியாது எனக் கூறி, இரு கல்லூரிகளின் விண்ணப்பத்தை நிராகரித்து அண்ணா பல்கலைக்கழக உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதேசமயம், தன்னாட்சி அந்தஸ்து கோரிய இரு கல்லூரிகளின் விண்ணப்பத்தை சுதந்திரமாக பரிசீலித்து, நேரில் ஆய்வு செய்து, நான்கு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல, தன்னாட்சி அந்தஸ்து கோரி விண்ணப்பித்த 30 நாட்களில் எந்த உத்தரவும் அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பிக்காததால், தங்கள் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி கரூரில் உள்ள வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், ஒரு வாரத்தில் விண்ணப்பம் குறித்த அறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
அந்த அறிக்கையை பெற்ற நான்கு வாரங்களில், தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, மூன்று வழக்குகளையும் முடித்து வைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion