'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ ; திருவண்ணாமலையில் பணி ஓய்விற்கான சான்றிதழ் பெற்ற ஏடிஎஸ்பி வெள்ளத்துரை
ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயனிடம் பணி ஓய்விற்கான சான்றிதழ்யினை பெற்றார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்த வெள்ளத்துரை, கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தார். 1998-ல் திருச்சி பாலக்கரை உதவி ஆய்வாளராக பணியாற்றியபோது, ரவுடி கோசி.ஜானை என்கவுன்டர் செய்தார். 2003-ல் சென்னை அயோத்திக்குப்பத்தைச் சேர்ந்த ரவுடி வீரமணியை என்கவுன்டர் செய்தார். இப்படித்தான் பணியில் இருந்தபோது பல்வேறு என்கவுன்டர்களை செய்துள்ளார். மேலும் 2004-ல் சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்கும் அதிரடிப்படைக் குழுவில் வெள்ளதுரை இடம் பெற்றார். வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இவருக்கு இரட்டை பதவி உயர்வு வழங்கப்பட்டு, துணை காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றார். கடந்த 2022-ம் ஆண்டு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கூடுதல் எஸ்.பி.யாக வெள்ளத்துரை நியமிக்கப்பட்டார்.
வெள்ளத்துரை வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல்
திருவண்ணாமலை மாவட்டம் பல்வேறு மாவட்டங்களின் எல்லைகள் கொண்டதாக உள்ளது. அதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் எல்லைகளும் அடங்கும், இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப் பஞ்சாயத்து, மாமூல் வசூலை தடுக்கவும், ரவுடிகளை ஒடுக்கவும் ரவுடிகள் ஒழிப்பு சிறப்புப் படை கூடுதல் எஸ்.பி.யாக வெள்ளத்துரை நியமிக்கப்பட்டார். கடந்த 2013-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் ராமு வயது (26) என்கிற கொக்கி குமார், காவல்துறையினர் காவலில் இருந்த போது உயிரிழந்த வழக்கில் வெள்ளதுரைக்கு தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது மானாமதுரை டிஎஸ்பியாக வெள்ளதுரை பணிபுரிந்தார். இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்ற ரீதியில் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
வெள்ளத்துரை பணியிட நீக்கம் ரத்து
ஆனால் புகார் கொடுத்திருந்த பாண்டிமுத்து ஆஜராகவில்லை. இந்தநிலையில் 2003 ஆம் ஆண்டு அயோத்திக்குப்பம் வீரமணியை வெள்ளதுரை கொன்றபோது, மெரினா காவல் நிலைய முன்னாள் காவல் ஆய்வாளர் லாயிட் சந்திராவிடம் உள்துறை விசாரணை நடத்தியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் கொக்கி குமார் வழக்கு, மறுபுறம் வீரமணி தொடர்பாக உள்துறை செயலகம் விசாரணை நடைபெற்ற நிலையில் வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையில், வெள்ளதுரையின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து உள்துறைச் செயலர் அமுதா நேற்று இரவு உத்தரவிட்டார். இதையடுத்து, வெள்ளதுரை நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் இருந்து முறைப்படி பணி ஓய்வுபெற்றார். மேலும், இவருடைய பணம் 5 லட்சம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.