சாலையில் திடீரென 5 அடி ஆழத்திற்கு பள்ளம் !! ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை கொரட்டூரில் திடிரென ஏற்பட்ட 5 அடி பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

திடீரென ஏற்பட்ட பள்ளம் ;
சென்னை கொரட்டூரில் இருந்து பாடி செல்லும் பிரதான நிழற்சாலையில் திடீரென 5 அடி ஆழம் 3 அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. சி.டி.எச் சாலைக்கு இணை சாலையாக பிரதான மக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த சாலையின் வழியே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் சூழலில் திடீர் பள்ளத்தால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொரட்டூரில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருவதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பால் ஏற்றிக் கொண்டு அந்த வழியை தான் பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்தது.
தொடர்ந்து விரிவடையும் பள்ளம்
தற்போது அந்த வழியில் பள்ளம் ஏற்பட்டதால் மாற்று பாதியை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 5 அடி ஆழமும் 3 அடி அகலமும் உள்ள இந்த பள்ளம் இன்னும் விரிவடைவதால் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
தற்பொழுது அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகர குடிநீர் வாரிய அதிகாரிகள் பள்ளத்தை ஆய்வு செய்தனர். விரைவில் பள்ளம் சரி செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சாலை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க வேண்டும்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பிரதான நிழற்சாலையில் பள்ளம் ஏற்பட்டு சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக கருக்கு கொரட்டூர் பகுதிகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிர் சேதம் போன்ற பெரிய விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க சாலைகளை முறையான ஆய்வு செய்து பள்ளங்கள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.





















