Local Trains Cancelled: மக்களே இதை கவனிங்க; வார இறுதி நாளான இன்று 44 புறநகர் ரயில்கள் ரத்து; ஏன் தெரியுமா?
சென்னை மற்றும் சென்னை புறநகரில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் 44 ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் சென்னை புறநகரில் இன்று அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னை கடற்கடை - தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கமாக செல்லும் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பொதுமக்களின் சிரமத்தை குறைக்க வார இறுதி நாளான இன்று கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதாவது, சென்னை கடற்கரை தாம்பரம் மார்க்கம் வழியே இன்று காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40 நண்பகல் 12,00, 12.10, 12.20, 12.40, மதியம் 1.15, 1.30, 2.00, 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மார்க்கமாக நாளை தொடங்கி மூன்று நாட்களுக்கு அதாவது பிப்ரவரி 19, 20, 21 ஆகிய தேதிகளில் இரவு 8.15, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதேபோல் இன்று இரவு இயக்கப்படும் 8.20 ரயிலும், 9.30 ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்களில் நாளை முதல் மூன்று தினங்களுக்கு அதாவது பிப்ரவரி 19, 20, 21 ஆகிய தேதிகளில் இரவு 11.20, 11.40ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் கடற்கரை வரை இயக்கப்படாமல் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படவுள்ளன.
அதே போல, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு மார்க்கம் இயக்கப்படும் ரயில்களில் இன்று காலை 11.00, பகல் 11.50, 12.30, 12.50, மதியம் 1.45,பிற்பகல் 2.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக இயக்கப்படும் மதியம் 1.00 மணி மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இன்று, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் காலை 9.30 மணி மின்சார ரயில், திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் முற்பகல் 11.05 மணி ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை மார்க்கத்தில் இன்று காலை 9.40, 10.55, 11.30, நண்பகல் 12.00, மதியம் 1.00 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாம்பரத்தில் இருந்து கோயம்பேட்டிற்கு வழக்கத்தை விட கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.