சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் 4 மருத்துவமனைகள் நிரந்தரமாக மூடப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சட்ட விரோதமாக கருமுட்டை சிகிச்சை செய்த தமிழகத்தில் உள்ள நான்கு மருத்துவமனைகளும் 15 நாட்களுக்குள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோடு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்ததாக சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள மருத்துவமனைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர். கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமி உறவினரிடம் பலமுறை தனக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது கூறியுள்ளார். அது குறித்து விசாரித்தபோது சிறுமியுடன் வளர்ப்புத் தந்தை பாலியல் உறவு வைத்துக்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் கருமுட்டையை விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர். அதில் சிறுமி கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து வளர்ப்பு தந்தையான சையத் அலி என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் மூலம் வரும் கருமுட்டைகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதற்கு சிறுமியின் தாய் இந்திராணி மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட மாலதி உள்ளிட்டோரை கைது செய்தனர். 16 வயது சிறுமிக்கு கருமுட்டை மருத்துவமனையில் இவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்த விசாரணையில், சிறுமியின் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை மாற்றம் செய்து போலி ஆதார் அட்டை தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை செய்துகொடுத்த ஜோசப் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
சிறுமியின் வளர்ப்புத் தந்தையான சையத் அலி, சிறுமியின் 12 வயதில் இருந்து அவருடன் உடலுறவு வைத்துக் கொண்டு அதன் மூலம் கிடைக்கும் கருமுட்டையை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அதில் 5,000 ரூபாய் இடைத்தரகராக செயல்பட்ட மாலதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏழு பேர் கொண்ட சுகாதாரத்துறையினர் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்த மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகள் கருமுட்டை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஈரோட்டைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுகாதாரத்துறை நடத்திய விசாரணையில் சிறுமி உண்மையான வயது மற்றும் பெயர் நீக்கம் செய்யப்பட்டு சிறுமி உறவினர்கள் சம்மதத்துடன் 6 தனியார் மருத்துவமனைகள் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. சுதா மருத்துவமனை சேலம் மற்றும் ஈரோடு கிளை, பெருந்துறையில் உள்ள ராம் பிரசாத் மருத்துவமனை, விஜய் மருத்துவமனை ஓசூர் உட்பட 6 தனியார் மருத்துவமனைகள் சட்டவிரோதமாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், சிறுமியிடமிருந்து பெறப்பட்ட போலி ஆதார் அட்டையில் ஒரு பக்கம் மட்டுமே அச்சிடப்பட்டிருந்ததாகவும், மற்றவர்களிடம் பெறப்பட்ட ஆதார் அட்டையில் இரு பக்கமும் அச்சிடப்பட்ட நகலை மருத்துவமனைகள் வாங்கியது தெரியவந்துள்ளது. எனவே போலி ஆதார் அட்டை என தெரிந்தும் வணிக ரீதியாக செயல்பட்ட மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது என்று கூறினார். இது மட்டுமின்றி கருமுட்டை வழங்கப்படுபவர் கணவர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்பட்டு அவரிடம் அனுமதி பெற வேண்டும், ஆனால் சிறுமியின் கணவர் என போலியாக இருவரை உருவாக்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டுள்ளது. எனவே சட்ட விரோதமாக கருமுட்டை சிகிச்சை செய்த தமிழகத்தில் உள்ள நான்கு மருத்துவமனைகளும் 15 நாட்களுக்குள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து சேலம், ஈரோடு, ஓசூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குனர்களின் மூலம் மருத்துவமனைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )