மேலும் அறிய
Advertisement
முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரித்த 2 பேருக்கு நிபந்தனை ஜாமின்
முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த இரண்டு நபர்களுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கப்பட்டது
முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த இரண்டு நபர்களுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது
வடசென்னை பகுதியில் கடந்த 11ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக துறைமுகம் கிழக்கு பகுதி கிளை செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மண்ணடியை சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் வினோத் ராஜ் ஆஜராகி இந்த புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்தான் இந்த சுவரொட்டிகளுக்கு நிதி உதவி செய்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், மேலும் இந்த விவகாரத்தில் பின்புலமாக உள்ளவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.
மீண்டும் இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது வழக்கில் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மண்ணடியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் ரமேஷ் ஆகியோர் இனி இது போன்ற செயலில் ஈடுபாடு மாட்டோம் என்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்கள்
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி,மூன்று வார காலம் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார் .
மற்றொரு வழக்கு
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை என்று சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்றக்கோரி கோரிக்கை விடுத்த நிலையில் வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதால் இந்த மனுவை ஏன் முடித்து வைக்க கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை கண்காணித்து வருகிறது. ஏற்கனவே இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும், வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கிய குறுந்தட்டை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே, இந்த வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை வழக்கு தொடர்பான ஆவணங்களை மாணவியின் பெற்றோர் தரப்புக்கு வழங்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதை சுட்டிக்காட்டிய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், வழக்கின் புலன் விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் ஒத்துழைக்க மறுப்பதாகவும் விடுதியில் மாணவி பயன்படுத்திய மொபைல் ஃபோனை வழங்க மறுப்பதாகவும் மரபணு சோதனைக்கு மாதிரிகள் வழங்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, மாணவி செல்போன் பயன்படுத்தி இருந்தால் அதை புலன் விசாரணை செய்யும் சிபிசிஐடி போலீசாரிடம் வழங்க வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடுத்த அறிக்கையை அக்டோபர் 10ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion