காஞ்சிபுரம் : 2 பட்டு நிறுவனங்கள் ரூ. 250 கோடி வருமானத்தை மறைத்தது அம்பலம் - வருமானவரித்துறை தகவல்
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பட்டு சேலை நிறுவனத்திலிருந்து கணக்கில் வராத ரூ. 44 லட்சம் ரொக்கம், 9.5 கிலோ தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் பிரபல ஜவுளி கடைகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதாகவும், வியாபாரத்தில் ஈட்டிய பணத்தை முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் கடந்த 5 ஆம் காலை 8 மணிக்கு காஞ்சிபுரத்துக்கு விரைந்தனர். அங்கு, காந்தி ரோடு மற்றும் டி.கே.நம்பி தெருவில் இயங்கி வரும் பிரபல தனியார் ஜவுளி நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கடையில் பணிபுரியும் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களை வெளியே அனுப்பி விட்டு ஷோரூம் காசாளர், பில்லிங் செக்ஷன்கள், குடோன் உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனை சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதேபோன்று காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே ஒரு தனியார் நிதி நிறுவனத்திலும் வருமான வரி சோதனை நடந்தது. மேலும் ஜவுளி கடை மற்றும் நிதி நிறுவன உரிமையாளர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது. மொத்தம் 8 இடங்களில் மொத்தம் 54 அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஒரே நேரத்தில் நடந்த சோதனையால் மற்ற நிறுவன உரிமையாளர்களும் பீதியடைந்தனர். அங்கும் சோதனை நடக்கக் கூடும் என்பதால் பரபரப்பு நிலவியது. வேலூர்: வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள தனியார் சில்க்ஸ் நிறுவனத்திற்கு இன்று காலை 9 மணியளவில் சென்ற வருமான வரித்துறையினர், கடையில் இருந்து யாரையும் வெளியேற அனுமதிக்கவில்லை. காரில் குழுவாக வந்து இறங்கிய வருமான வரித்துறையினர், ஷோரூம் காசாளர், பில்லிங் செக்ஷன்கள், சரக்கு இருப்பு வைக்கும் கிடங்கு உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது கடையின் அனைத்து விற்பனை, கொள்முதல், இருப்பு பதிவேடுகள், ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு மேற்கொண்டனர். அதோடு கடையின் சரக்கு இருப்பையும் தங்கள் ஆய்வின்போது கருத்தில் கொண்டனர். தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையின் இந்த ரெய்டு காரணமாக வேலூர் காட்பாடி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சோதனையானது காஞ்சிபுரம் வேலூர் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளிலும் மூன்று நாட்கள் நீடித்தது.
இந்நிலையில், 2 நிறுவனங்கள் ரூ.250 கோடி வருமானத்தை மறைத்திருப்பதாக வருமானவரித்துறை தற்போது அறிக்கை வெளியிட்டிருக்கிறது. காஞ்சிபுரத்தை சேர்ந்த பட்டு சேலை நிறுவனம் ரூ.100 கோடி அளவும், நிதி நிறுவனம் ரூ.150 கோடியும் வருமானத்தை மறைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் நிதி நிறுவனத்திலிருந்து கணக்கில் வராத ரூ.1.35 கோடி ரொக்கம் மற்றும் 7.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், பட்டு சேலை நிறுவனத்திலிருந்து கணக்கில் வராத ரூ. 44 லட்சம் ரொக்கம், 9.5 கிலோ தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் வருமானவரித்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.