டாஸ்மாக்கில் இனி ‘நோ எக்ஸ்ட்ரா பைசா’...இன்று முதல் இது கிடையாது.. மதுபிரியர்களே என்ஜாய்
Tasmac QR Code Bill: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 220 டாஸ்மார்க் கடைகளில் ஆன்லைன் மூலம் பில் கொடுக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு டாஸ்மாக் கடைகளை நடத்துவதால் பல்வேறு விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில், விற்பனையும் மாதம் மாதம் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
10 முதல் 40 ரூபாய் வரை
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் குற்றச்சாட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு குவாட்டர் மது பாட்டில் வாங்கினால் பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்பதாக தொடர்ந்து வீடியோக்களும் வெளியாகியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சில மாதங்களுக்கு முன்பு மது குடிப்பவர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் கூடுதல் பணம் வைத்து விற்பது தொடர்பான வாக்குவாதங்கள் கூட எழுந்து சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகம் வசூல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் விவகாரத்தில் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலையில் இறங்கியது.
ஆன்லைன் பேமெண்ட்
இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பில் கொடுப்பது, ஆன்லைன் மூலம் பேமெண்ட் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்ய அரசு முடிவு செய்தது. இதற்காக க்யூ ஆர் கோடு பொருத்திய மது பாட்டில்கள் தயாரிப்பதையும் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்தால், மதுபாட்டினில் விலையை உறுதிப்படுத்திக் கொண்டு அதே விலையில் பில் கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்
இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுமார் 220 டாஸ்மாக் கடைகளில், இன்று முதல் டிஜிட்டல் முறையில் மதுபானங்களுக்கு ரசீது மற்றும் qr கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. மது பாட்டிலுக்கு நிர்ணிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி ஆன்லைன் மூலம் நடைபெறும் என்பதால் கூடுதல் விலைக்கு டாஸ்மார்க் கடைகளில் மது பாட்டில்கள் விற்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.