சென்னைக்கு புது ரூட்.. தென் மாவட்ட மக்கள் ஹேப்பி.. GST ரோடுக்கு Good Bye..!
GST And ECR Connecting Road: செங்கல்பட்டு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பூஞ்சேரி முதல் கருங்குழி வரை புதிய சாலை அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரமாக உள்ள சென்னை மற்றும் சென்னையை சுற்றி பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் வேலையை தேடி சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் உள்ள, தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பல லட்சக்கணக்கான வெளியூர் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
வளரும் சென்னை
குறிப்பாக சென்னை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான வெளி மாவட்டத்தை சேர்ந்த, பொதுமக்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதனால் சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை மற்றும் தென் மாவட்டத்தை இணைக்க கூடிய மிக முக்கிய சாலையாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. நாள்தோறும் இந்த சாலையில் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை (Chennai Trichy Highway Road)
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சென்னையிலிருந்து வெளியேறும் வாகனங்கள் எண்ணிக்கை பல லட்சமாக அதிகரிக்கிறது. இதேபோன்று விடுமுறை முடிந்த பிறகும் சென்னையை நோக்கி படையெடுக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது, போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது.
தொடர்ந்து கனரக வாகனங்களும் இந்த சாலையில் அதிகரித்து வருவதால், மாற்றுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வண்டலூர், கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
புதிய சாலைகள் அமைக்கும் திட்டம்
தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வரவும், அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலை வசதிகளை மேம்படுத்தவும் அரசு ஆலோசித்து வருகிறது. அந்த வகையில் சென்னையின் மற்றொரு முக்கியசாலியாக உள்ள கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் வகையில் புதிய சாலை திட்டத்தை கையில் எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலை இணைப்பு
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்கனவே திருவான்மியூர்-அக்கறை வரை ஆறு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையின் தற்போது அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அடுத்த கட்ட திட்டமாக, கருங்குழி முதல் பூஞ்சேரி வரை புதிய சாலை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தமிழக அரசு தயாரித்து வருகிறது. 32 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாவட்டத்திலிருந்து வருபவர்கள் மற்றும் தென் மாவட்டத்திற்கு செல்பவர்கள் இந்த சாலையை பயன்படுத்தத் தொடங்கினால், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான திட்டம் தயாரிக்க டெணடர் விடப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை தயாரான பிறகு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.





















