புதிய மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரி எப்பொழுது ? முக்கிய தகவலை கூறிய அமைச்சர்..!
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 54வது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 100 மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்சுப்ரமணியன் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 54வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் மா.சுப்ரமணியன் பட்டம் பெற்ற 100 மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது : செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி 1965 முதல் இன்று வரை மிகச் சிறப்பான முறையில் இயங்கி வருகின்றது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஒரு சிறந்த பல்நோக்கு மருத்துவமனையாக 1750 படுக்கை வசதிகளைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் 22 முதுகலை மற்றும் எட்டு சிறப்பு முதுகலை பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆஞ்சியோகிராம்
இந்த மருத்துவமனையின் மூலம் 3500 முதல் 4000 புற நோயாளிகள் நாள்தோறும் பயன் பெறுகின்றனர். மேலும் 1200 முதல் 1400 உள்நோயாளிகள் சிறந்த சிகிச்சை பெறுகின்றனர். இங்கு விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (TAEI WARD) 24 மணி நேரமும் துரிதமான முறையில் செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றி வருகிறது.
மாத்திற்கு 100 நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி, மேஸ் மேக்கர் கருவி பொருத்துதல் போன்ற ரூ. 40 லட்சம் வரை செலவினம் கொண்ட உயர் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. மூளை சாவு அடைந்தவர்களிடம் இருந்து கல்லீரல், சிறுநீரகம், கருவிழி போன்ற உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, பல்வேறு மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேசியதாவது : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு செங்கல்பட்டு மாவட்டத்தில், ரூ.23.95 கோடி செலவில், 10 நகர்புற நலவாழ்வு மைய கட்டிடங்கள், 11 துணை சுகாதார நிலையங்கள், 11 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் குடியிருப்பு, புறநோயாளிகள் பிரிவு, வட்டார பொது சுகாதார அலகு, வட்டார பாலியேட்டிங் நோய் தடுப்பு மையம் மற்றும் கூடுதல் கட்டிடங்கள், திருத்தேரியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம், தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் நுரையீரல் மறுவாழ்வு சிகிச்சை மையம், நவீன சமையல்கூடம், ஆக்ஸிஜன் படுக்கையுடன் கூடிய காசநோய் சிகிச்சை மையம், சி.டி.ஸ்கேன் உபகரணம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஊட்டச்சத்து பூங்கா, மேம்படுத்தப்பட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, பரவலாக்கப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்பு, உடற்பயிற்சி கூடம் மற்றும் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
புதிய மருத்துவக் கல்லூரிகள் எப்பொழுது ?
புதியதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி மற்றும் மருத்துவக் கல்லூரி இல்லாத காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் முதல்வர் கேட்டுள்ளார். இதற்கான ஆணை விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.
ஒரு பெரிய பேரிடர் காலத்தில் உங்களால் சிறந்த மருத்துவராக சாதிக்க முடியும். எந்த நாட்டில் வேண்டுமானாலும் உங்களுடைய திறமையை வெளிப்படுத்த முடியும் அதற்கான ஒரு மிகச்சிறந்த பயிற்சியை செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உங்களுக்கு தந்திருக்கிறது. செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியை பொறுத்தவரை அதிகம் விபத்துக்கள் எங்கே நடந்தாலும் அது சிகிச்சை தருகின்ற பணியை நம்முடைய செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனை அந்தந்த துறைகளில் சிறப்பான சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாக சிறந்து விளங்கிக்கொண்டிருக்கிறது. என்று பேசினார்.