செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் உச்சகட்ட பரபரப்பு; 9 மாணவர்கள் தற்கொலை மிரட்டல்?
chengalpattu juvenile home: செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் மாணவர்கள் தற்கொலை மிரட்டலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.
சிறார் கூர்நோக்கு இல்லம்
சிறார் கூர்நோக்கு இல்லம் ( chengalpattu juvenile home )
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சிறார் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. சென்னையை ஒட்டி அமைந்துள்ள சிறார் கூர்நோக்கு இல்லம் என்பதால், சிறுவயதிலேயே குற்றம் செய்யும் சிறுவர்கள், பலரும் நீதிமன்ற உத்தரவுன்படி இந்த சிறார் கூர்நோக்கு பள்ளியில், அடைத்து அவர்களுக்கு நன்னெறிகள் மற்றும் கல்வி உள்ளிட்டவற்றை போதித்து வருகின்றனர். சிறுவயதிலேயே சூழ்நிலை காரணமாக குற்றம் செய்யும் சிறுவர்கள், சிறார் கூர்நோக்கு இல்லத்திலிருந்து வெளியேறும் பொழுது, சமூகம் மதிக்கும் நபராக வெளியே அனுப்ப வேண்டும் என்பதே இந்த இல்லத்தின் நோக்கமாக இருந்து வருகிறது.
அடித்து கொலை
இந்தநிலையில் செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லமானது, சர்ச்சையில் சிக்கி வருகிறது. குறிப்பாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி தாம்பரம் பகுதியை சேர்ந்த, கோகுல் ஸ்ரீ என்ற சிறுவன் செங்கல்பட்டு இல்லத்தில் பணியாற்றி வரும் காவலர்களால், அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 6 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், அடுத்த மாதமே செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு பள்ளியிலிருந்து, 2 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
காவலர்களுக்கும், சிறுவர்களுக்கும் மோதல்
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம், காவலர்கள் மற்றும் சிறுவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதல் சம்பவத்தால் 3 சிறுவர்கள் காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதே நேரத்தில் சிறுவன் ஒருவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சர்ச்சை சுற்றி வந்த நிலையில், தற்பொழுது 9 சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை மிரட்டல்
செங்கல்பட்டு கூர்நோக்கு சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் இன்று திடீரென 9 சிறுவர்கள் தங்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என, காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தற்கொலை மிரட்டல் விடுத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 9 மாணவர்கள் அங்கு இருக்கும் கட்டிடங்களில் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டி வருகின்றனர். சம்பவம் இடத்திற்கு டிஎஸ்பி தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்புத் துணை விரைந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்புத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கோரிக்கைகள் என்ன ?
ஒன்பது மாணவர்கள் மூன்றாவது மாடியில் நின்று கொண்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் காவல்துறையினர் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட தகவலின் அடிப்படையில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் விளையாட அனுமதிக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாத பட்சத்தில், கண்டிப்பாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று, சிகிச்சை அளிக்க வேண்டும். கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.