செங்கல்பட்டில் மீண்டும் ஊறல் கள்ளச்சாராயம்.. தமிழ்நாட்டில் தொடரும் அதிர்ச்சி சம்பவம்
Chengalpattu illicit liquor: சுமார் 20 லிட்டர் அளவிற்கான கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மழுவங்கரணை பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படும் ஊறல் குடித்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி பகுதியில், விஷ சாராயம் குடித்து 66 நபர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டை மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் மழுவங்கரணை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் தேவன் (67). இவர் விவசாயம் செய்து வருகிறார்.
ஊறல் கள்ளச்சாராயம்
இவருக்கு சொந்தமான நிலங்களில் பணி செய்ய வந்த பணியாளர்களுக்கு, ஊறல் மூலமாக தயாரிக்கப்படும் கள்ளச்சாராயத்தை தயாரித்து கொடுத்ததாக காவல்துறையினருக்கு தகவல் சென்றது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தேவனிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் யார் யாருக்கு அவர் சாராயம் கொடுத்தார் எனவும் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது விவசாய நிலத்தில் பணி செய்ய வந்த அய்யனார், பெருமாள் மற்றும் மணி உள்ளிட்ட ஒரு சிலர் அவர் கொடுத்த கள்ளச்சாராயத்தை அருந்தியதாக தெரிய வந்தது.
" எந்தவித பாதிப்பு இல்லை "
இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக, மாவட்ட நிர்வாகத்திற்கும் சுகாதாரத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவத் துறையினர், மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொண்டதில் மணி, பெருமாள் மற்றும் அய்யனார் உள்ளிட்ட மூன்று பேர் கள்ளச்சாராயத்தை அருந்தியது தெரியவந்தது. மூன்று பேருக்கும் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை அவர்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக கிராமம் முழுவதுமே பரபரப்புடன் காணப்பட்டது.
தொடர்ந்து போலீசார் தேவனை கைது செய்து, அவரிடம் இருந்து கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். சுமார் 20 லிட்டர் அளவிற்கான கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. போலீசார் நடத்திய விசாரணையில் தேவன் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அதன் பிறகு, தேவன் கள்ளச்சாராயம் வியாபாரம் செய்வதை நிறுத்திவிட்டு, விவசாயம் செய்ய துவங்கியுள்ளார். இந்தநிலையில் தான் வேலை செய்ய வந்த பணியாளர்களுக்கு கள்ளச்சாராயம், காய்ச்சி கொடுத்து போலீசில் சிக்கி உள்ளார். ஊறல் மூலம் தயாரிக்கப்படும் சாராயமானது, பட்டை, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நொதிக்க வைத்து, வடிகட்டி அதை கொதிக்க வைத்து அந்த நீரில் வரும் ஆவியை குளிர வைத்து சாராயமாக காய்ச்சி விற்பார்கள் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை மருத்துவர்களிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது : மூன்று பேர் சாராயம் குடித்ததற்கான அறிகுறி இருந்தது, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை அனைவரும் நலமாக உள்ளதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது : கள்ளச்சாராயம் காய்ச்சிய நபரை கைது செய்துள்ளோம். அவரிடமிருந்து கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.