Covishield Vaccine: 4.20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பிய மத்திய அரசு!
தடுப்பூசி தட்டுப்பாடு தமிழகத்தில் நிலவுகிறது, அதனால் ஜூன் 3ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது அதனால் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், 4.20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசியை தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் "மே மாதம் தமிழகம் வர வேண்டிய 1.74 லட்சம் தடுப்பூசியை தற்போது வரை மத்திய அரசிடமிருந்து வரவில்லை, 4.94 லட்சம் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளது, இது விரைவில் முடிந்து விடும் என்பதால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும், அதனால் ஜூன் 3ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை தடுப்பூசி போடும் பணிகள் தமிழக்தில் நிறுத்தப்பட உள்ளதாக" தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆரம்ப கால கட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் சுணக்கம் இருந்தாலும், தற்போது மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் இந்த ஜூன் மாதத்திற்கு 42.58 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது இந்நிலையில் அது எப்போது வரும் என்பதிலும் தெளிவில்லை, அதனால் தடுப்பூசி போடும் பணியை தொடர்ந்து தமிழகத்தில் மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியபோதும், இன்று மாலை வரை மட்டுமே தடுப்பூசிகள் தமிழகத்தில் கையிருப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தான் தமிழகத்திற்கு 45 வயதிற்கு மேல் உடையவர்களுக்கு போடப்படும் 4.20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள தகவலின் படி தடுப்பூசி இன்று மாலை 5.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேரும். அதற்கு பிறகு இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக இது வரை தமிழகத்திற்கு 96.18 லட்சம் டோஸ் தடுப்பூசி மத்திய அரசு வழங்கியுள்ளது, அதில் 92 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதம் 4 லட்சம் டோஸ் வீணாகியுள்ளது எனவும் தெரிகிறது. தற்போதைய நிலையில் நாள் ஒன்றிற்கு சுமார் 28000 நபர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்படுகின்றனர், சுமார் 450 நபர்கள் வரை உயிரிழக்கின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் நிலவும் அதிகப்படியான பாதிப்பை தடுக்க கடுமையான தளர்வுகள் அற்ற ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டால் அது மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய அரசு வழங்கியுள்ள 4.20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் தற்போதைக்கு அடுத்த சில நாட்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அதற்குள்ளாக வர வேண்டிய அடுத்தகட்ட டோஸ்களும் சரியாக வந்து சேர வேண்டிய அவசிய நிலை தமிழகத்தில் நிலவி கொண்டு தான் இருக்கிறது.