திருவாரூரில் பிறந்து 15 நாட்களேயான குழந்தையை விட்டு சென்ற கல்லூரி மாணவி
’’திருமணமாகாத நிலையில் கல்லூரி மாணவி வினிஷாவுக்கு கடந்த 13ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்ததுள்ளது’’
திருவாரூர் மாவட்டம் காட்டூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் வினிஷா (20). இவர் திருவாரூர் அருகே கடாரங்கொண்டான் பகுதியில் உள்ள திருவிக அரசு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரி மாணவிக்கு அடிக்கடி மயக்கம் மற்றும் வாந்தி தொடர்ந்து ஏற்பட்டு வந்துள்ளது அதனை எடுத்து பெற்றோர்கள் தனது மகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வினிஷா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே கடந்த 13ஆம் தேதி வினிஷாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணமாகாத நிலையில் வினிஷாவிற்கு குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று குழந்தையை விட்டுவிட்டு வினிஷா மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். மருத்துவமனையில் வினிஷா அளித்த முகவரி தகவல்கள் மற்றும் அலைபேசி எண்ணை கொண்டு திருவாரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையை மீட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தையை விட்டு விட்டு திருமணமாகாத கல்லூரி மாணவி தப்பி ஓடிய சம்பவம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கல்லூரி மாணவியை கொடுத்த தொலைபேசி என்னை காவல்துறையினர் தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் என வந்துள்ளதாகவும் சம்மந்தப்பட்ட இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தஞ்சாவூரில் கழிவறையில் குழந்தையை போட்டு விட்டு சென்ற சம்பவம் நடந்து சில நாட்களே ஆன நிலையில் தற்போது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருமணமாகாமல் கல்லூரி மாணவி குழந்தையை பெற்று விட்டு தப்பி ஓடிய சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசின் சார்பில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் மனரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு மாவட்டம்தோறும் மருத்துவர் தலைமையிலான குழு அமைத்து அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் நேரடியாக மருத்துவர்கள் சென்று மாணவ-மணவிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். அப்படி செய்தால்தான் வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முடியும் அதற்கு தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.