Sarpatta Parambarai: இது பா.ரஞ்சித்தின் நாக்-அவுட் : பஞ்ச் கொடுத்திருக்கும் சார்பட்டா பரம்பரை..!
சமீபத்தில் ரிலீஸான படங்களில், ஓடிடியில் ரிலீஸாவதற்கு பதிலாக பெரிய திரையில் பார்த்திருக்கலாம் என நினைக்க வைத்தது சார்பட்டா..
Pa. Ranjith
Arya, Thushara Vijayan, Pasupathy, John Vijay, Kalaiarasan
மெட்ராஸ் பாக்ஸிங் பரம்பரைகளில் சார்பட்டா- இடியப்ப பரம்பரைகளில் நடக்கும் ஒரு முக்கியமான போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பதுதான் சார்பட்டா பரம்பரை திரைப்படம்.
படத்தின் டைட்டிலே சொல்லிவிடுவதால், இதில் சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்தவர்தான் கபிலன் (ஆர்யா), அவரது பயிற்சியாளர் ரங்கன் வாத்தியார் (பசுபதி). ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக பாக்ஸிங் செய்ய களமிறங்குகிறார் ஆர்யா. இடியப்ப பரம்பரையைச் சேந்த வேம்புலியை (ஜான் கொக்கேன்) வென்றாக வேண்டும். பயிற்சி எடுக்கிறார் ஆர்யா, இடையில் எமெர்ஜென்ஸி காலத்தால் சூழல் மாறுகின்றது. இறுதியில், வேம்புலியை கபிலன் வென்றான என்றால், பெரும்பாலும் அனைவருக்கும் இதற்கான பதில் தெரிந்திருக்கும். ஆனால், விளையாட்டினும் அரசயில் புகுந்தபோதும், போட்டியில் வெற்றி பெறுவதற்கான இரு வீரர்களின் பயணத்தில் இடையே வரும் சூழலை சுவாரஸ்யமாக பேசியிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ், படத்தின் கேஸ்டிங். கபிலனாக ஆர்யா. தனது உடல்வாகை பக்காவாக ஒரு பாக்ஸிங் வீரர் போல மாற்றியமைக்க மெனகெட்டதற்கு பலன் கிடைத்துள்ளது. கபிலன் கதாப்பாத்திரம் ஆர்யாவின் பெயர் சொல்லும். படத்தில் நிறைய முறை அழுகிறார், தனது அம்மாவிடம் மனைவியிடம் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கிறார், அந்த இடங்களில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கலாம்.
சார்பட்டா – இடியப்ப பரம்பரைகளுக்கு இடையேயான மோதமாக மட்டுமில்லாமல், கபிலனின் அப்பாவிற்கு நேர்ந்தது போல, தனிப்பட்ட முறையில் அவனது வளர்ச்சி பிடிக்காத சிலர் அவனை வீழ்த்த திட்டம் தீட்டுகிறார்கள்.
படத்தில், கபிலன், வேம்புலி கேரக்டர்களை தவிர்த்து குறிப்பிடுவதற்கு இன்னும் நிறைய கேரக்டர்கள் இருக்கின்றன. முக்கியமான கதாப்பாத்திரமாக பாக்ஸிங் மாஸ்டராக பசுபதி, படம் என்னவோ இவரைச் சுற்றிதான் நகரும். கபிலனின் மனைவி மாரியம்மாளாக துஷாரா விஜயன், யதார்த்தமாக நடித்துள்ளார். டேடி கதாப்பாத்திரத்தில் இங்கிலிஷ் பேசிக்கொண்டே மாஸ் காட்டும் ஜான் விஜய், டேன்சிங் ரோசாக ஷபீர். கைதிக்கு பிறகு அர்ஜூன் தாஸ் எப்படி கொண்டாடப்பட்டாரோ அப்படி டேன்சிங் ரோஸிற்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. அவர் பாக்ஸிங் ரிங்கில் வந்துபோகும் காட்சிகள் மட்டுமின்றி, தனித்துமான உடல் மொழியால் கூட்டத்தின் நடுவிலும் கவனத்தை ஈர்க்கிறார். இன்னும் பல முக்கிய கதாப்பாத்திரங்களில் பலர் நடித்துள்ளனர். அனைவரது நடிப்பும், மெனக்கெடலும் படத்தில் தெரிகிறது, அந்தந்த கதாப்பாத்திரங்களாகவே வந்து போகின்றனர்.
பாக்ஸிங் ரிங் ஃபைட்டுகளை ரியலாக காண்பித்த அன்பறிவு டீம், ஒளிப்பதிவாளர் முரளி, எடிட்டிங் செல்வா, இசையமைப்பாளர் சந்தோஷ் என அவரவர் பங்கினை சரியாக செய்து முடித்துள்ளனர்.
2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடும் திரைப்படத்தில், போர் அடிக்காத முதல் பாதியை கொடுத்துவிட்டு, இரண்டாம் பாதியில் சற்று சறுக்குகிறது சார்பட்டா பரம்பரை. எனினும், படம் காட்சியமைக்கப்பட்டிருக்கும் விதம், ரிசல்ட் தெரிந்தும் போட்டியை காணும்போது விசில் அடிக்க தூண்டும் மேக்கிங் என ஸ்போர்ட்ஸ் டிராமாக்களில் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது சார்பட்டா பரம்பரை! சமீபத்தில் ரிலீஸான படங்களில், ஓடிடியில் ரிலீஸாவதற்கு பதிலாக பெரிய திரையில் பார்த்திருக்கலாம் என நினைக்க வைத்தது சார்பட்டா!