Razakar Movie Review: ஹைதராபாத் வரலாறா, இல்லை வெறுப்பு பிரச்சாரமா.. ரஸாக்கர் படத்தின் விமர்சனம்!
Razakar Movie Review in Tamil: தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியிருக்கும் ரஸாக்கர் படத்தின் விமர்சனம்..
Yaata Satyanarayana
Anasuya Bharadwaj , Vedhik , Indraja , Bobby Simha , Makarand Deshpande , Arav Chowdharry
Theatrical Release
Razakar Movie Review in Tamil: சமர்வீர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் குடூர் நாராயணன் தயாரித்து யதா சத்ய நாராயணா இயக்கியுள்ள படம் ரஸாக்கர். பாபி சிம்ஹா, வேதிகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.
ரஸாக்கர் (Razakar The Silent Genocide of Hyderabad)
1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது இந்தியா 584 சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்தது. பெரும்பாலான மன்னர்கள் தங்களது ராஜ்ஜியத்தை சுதந்திர இந்தியாவுடன் இணைக்க மறுத்துவிட்டனர். சுதந்திர இந்தியாவின் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லாபாய் படேல், அவரின் செயலாளர் வி. பி மேனன் ஆகியோர் இணைந்து மன்னர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் ராஜ்ஜியத்தை கைவிட வைத்தனர்.
மற்ற சமஸ்தானங்கள் தங்களது ராஜ்ஜியங்களை இந்தியாவுடன் இணைக்க சம்மதித்துவிட்ட நிலையில், இறுதியாக காஷ்மீர் மற்றும் ஹைதராபாத் மட்டும் தனி சமஸ்தானங்களாக இருந்தன. ஒரு பக்கம் காஷ்மீர் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே இருக்க, மறுபக்கம் ஹைதராபாத் நிஜாம் தனது ராஜ்ஜியம் கைவிட்டுப் போகாமல் இருக்க கடும் அடக்குமுறைகளை கையாண்டார். பெரும்பான்மையான இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் மதக்கலவரங்கள் வெடித்தன. நிஜாம் அரசு மக்களை கொடூரமாக கொன்றழித்தது.
இந்த பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ரஸாக்கர். நிஜாம் அரசின் கீழ் செயல்பட்ட ரஸார்க்கர்கள் (படை) நிஜாம் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த சாமானிய மக்களின் மீது நடத்திய வன்முறைகள் இந்தப் படத்தில் பிரதானமாக இடம்பெறுகின்றன.
ஒவ்வொரு ஊர்களிலும் நிஜாம் அரசை எதிர்த்த சாமானிய மக்கள் சிறு குழுக்களின் தலைவர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட கதைகள் இந்த மொத்தப் படத்திலும் இடம்பெறுகின்றன. இறுதியில் இந்திய ராணுவப் படையை அனுப்பி கடும் மோதலுக்குப் பின் நிஜாம் அரசை சரணடையச் செய்தார் வல்லாபாய் பட்டேல். அதனுடன் படம் நிறைவடைகிறது.
விமர்சனம்
மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் திரைக்கதைக்கு என்று பெரிதாக எதையும் மெனக்கெடவில்லை. ஒவ்வொரு ஊர்களில் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை படத்தின் இறுதிவரை அடுத்தடுத்தக் காட்சிகளால் தொகுத்திருக்கிறார் இயக்குநர். ஹைதராபாத்தில் நடக்கும் இந்த நிகழ்வுகளை முன்ஷி வல்லாபாய் பட்டேலுக்கு தகவல் தெரிவிக்கிறார்.
இப்படி ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை பார்ப்பது போன்ற ஒரு சலிப்பு நம் பொறுமையில் எல்லையை சோதிக்கிறது. பாபி சிம்ஹா, வேதிகா இருவரும் ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே வந்து படு சுமாரான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு போகிறார்கள். சம்பந்தம் இல்லாமல் உணர்ச்சிப் பொங்க வரும் பாடல்கள், படு சுமாரான வி.எஃப் எக்ஸ் காட்சிகள் என எல்லா வகையிலும் பார்வையாளர்களை வறுத்தெடுக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் இயக்குநர்.
கொலை, பெண்களை நிர்வானப்படுத்துவது, குழந்தைகளை கொலை செய்வது என வன்முறையான காட்சிகள் படம் முழுவதும் நிறைந்திருக்கின்றன.
இந்தியா போன்ற நாட்டில் இஸ்லாமிய வெறுப்பு உச்சத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகளும் சிறுபான்மையினர் மக்களும் குற்றச்சாட்டை முன் வைத்து வரும் சூழலில், இஸ்லாமியர்கள் செய்த கொடுமைகளை பாருங்கள் என்ற பிரச்சாரமே இந்தப் படத்தின் நோக்கமாக இருக்கிறது.
வெறுப்பை பிரச்சாரம் செய்து மதக்கிளர்ச்சியை ஏற்படுத்த விரும்பும் கும்பல், வரலாற்றில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள என்ன எல்லாம் இருக்கிறதோ, அதை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளவே நினைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்றே சொல்லலாம். அதில் ஒன்றுதான் ரஸாக்கர்கள் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்!