`இராமே ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்’ : காளை மாடு, விவசாயம், கிராமம் மற்றும் சோசியல் மெசேஜ்!
காளைகளைக் குழந்தைகளாக வளர்க்கும் தம்பதிகளுக்குத் திடீரென அவை காணாமல் போகும் போது என்ன மனநிலை இருக்கும் என்பதில் தொடங்கி, கிராமங்களின் அரசியலைப் பேச முயன்றிருக்கிறது
Arisil Moorthy
மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வாணி போஜன், வடிவேல் முருகன்
காளை மாடுகளைக் குழந்தைகளாக வளர்க்கும் தம்பதிகளுக்குத் திடீரென காளை மாடுகள் காணாமல் போகும் போது என்ன மனநிலை இருக்கும் என்பதில் தொடங்கி, கிராமங்களின் அரசியலைப் பேச முயன்றிருக்கிறது `இராமே ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்’. அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி ராமனின் ஆட்சியிலும், ராவணனின் ஆட்சியிலும் ஏழை, கிராம மக்களின் நிலையில் மாற்றங்கள் நிகழ்வதில்லை என்ற பொருளில் இந்தத் தலைப்பைச் சூட்டியிருக்கிறார்.
பூச்சேரி என்ற தமிழ்நாட்டின் சிறிய கிராமம் ஒன்று தான் கதைக்களம். குன்னிமுத்து (மிதுன் மாணிக்கம்), வீராயி (ரம்யா பாண்டியன்) ஆகிய தம்பதிகள் தங்கள் குழந்தைகளைப் போல கறுப்பன், வெள்ளையன் என இரு காளைகளை வளர்த்து வருகிறார்கள். தொடக்க காட்சியில், குன்னிமுத்து தனது காளைகளைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செல்ல, தலைமைக் காவலர் புகாரைப் பெற மறுத்து, திரும்ப அனுப்புகிறார். குன்னிமுத்துவின் காளைகளைக் காணவில்லை என்பதைத் தனியார் தொலைக்காட்சி நிருபர் நர்மதா (வாணி போஜன்) ஆவணப்படமாக இயக்கி, அதற்கு ஒரு அரசியல் கோணத்தை அளிக்கிறார். இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாகிறது. எனினும் சில நாள்களில் அதற்கான முக்கியத்துவமும் குறைந்துவிடுகிறது. தொடர்ந்து, குன்னிமுத்து - வீராயி தம்பதியினர் தங்கள் காளைகளை மீண்டும் மீட்டனரா என்பது மீதிக்கதை.
அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி `இராமே ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்’ படத்தின் மூலமாகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். முதல் படம் என்பதால் ஒரே படத்தில் கிராமம் தொடர்பாகவும், கிராமங்கள் குறித்து க்ளீஷேவாக வழங்கப்படும் `அப்பாவி மனிதர்கள்’ என்ற சித்தரிப்பையும் கையில் எடுத்துக் கொண்டு அரசியல் கருத்துகளை அள்ளித் தெளித்திருக்கிறார் அரிசில் மூர்த்தி. காணாமல் போன காளைகளில் தொடங்கி, க்ளைமேக்ஸ் வரை இந்த `சோசியல் மெசேஜ் வகுப்பு’ பார்வையாளர்களுக்கு அதீதமாகக் கதைக்குத் தொடர்பில்லாமல் திணிக்கப்பட்டிருக்கிறது. காளைகளைக் காணவில்லை எனத் தொடங்கும் கதை, குளம் தூர் வாருதல், பஸ் வசதி இல்லாமை, பள்ளிக்கூடம் இல்லாமை என எங்கெங்கோ செல்வதால் திரைக்கதையில் தொய்வு ஏற்படுகிறது. இயக்கமும் கடந்த ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்களின் பாணியிலேயே இருப்பதால், கதையில் இயல்பாகவே அமெச்சூர் தன்மை ஒட்டிக் கொள்கிறது.
குன்னிமுத்து கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிதுன் மாணிக்கம் அப்பாவி கிராமத்து மனிதராகச் சிறப்பாக நடித்திருக்கிறார். காளைகளை எந்த இடத்திலும் விலங்குகள் என்று சொல்லாமல் பிள்ளைகள் என்று அழைப்பதாகட்டும், காளைகளுக்கு லாடம் கட்டும்போதும், அரசியல்வாதிகளால் தாக்கப்படும் போதும், இறுதிக் காட்சிகளிலும் உணர்ச்சிப் பெருக்குடன் நடித்திருக்கிறார். `ஜோக்கர்’ படத்தில் பார்த்த அதே வேடத்தைப் போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரம்யா பாண்டியன். காளைகள், விவசாயம், ரேஷன் கடை எனத் தொடர்ந்து மெசேஜ்களாகப் பேசிக் கொண்டிருக்கும் கதாபாத்திரம் ரம்யா பாண்டியனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மந்தினி என்ற குணசித்திர வேடத்தில் நடித்திருக்கும் வடிவேல் முருகன் காமெடியிலும் பங்காற்றியுள்ளார். வாணி போஜனின் தொலைக்காட்சி நிருபர் கதாபாத்திரம் கிராம மக்களை அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக வந்திருக்கும் நகர்ப்புற மீட்பராகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்.
இந்தியா முழுவதும் தேர்தல் அரசியல்வாதிகள் மீது எளிய மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை மையப்படுத்தி, அதனைக் கேலி செய்யும் படமாக உருவாகியிருக்கிறது `இராமே ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்’. எனினும், அதனை எந்தத் தரப்பிலும் நின்று செய்யாமல், அனைத்து அரசியல்வாதிகளும் கெட்டவர்கள், எதுவும் தெரியாதவர்கள் என்ற ரீதியிலான சித்தரிப்பு, மேல்தட்டுப் பொதுப் புத்தியின் பார்வையில் இருந்து தோன்றியதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் செல்லாத நோட்டுக்காக ஏமாறும் குஜராத் சேட்டு, ஆடி காரில் வந்து இறங்கி விவசாயி கெட்டப்பிற்கு மாறும் `விவசாயி’ (அய்யாக்கண்ணு ரெபரன்ஸ்), சீமான், ஸ்டாலின் போன்றோரின் ரெபரன்ஸ் எனப் பல இடங்களில் ரியல் அரசியலைப் பகடி செய்வதாக நினைத்துக் கொண்டு, தமிழ்நாட்டை உத்தரப் பிரதேசம், பீகார் முதலான மாநிலங்களின் நிலம், அரசியலோடு தொடர்புபடுத்தியிருக்கிறது இந்தப் படம். அதனாலேயே யதார்த்தமான திரைப்படமாக இல்லாமல் சறுக்கிறது. இறுதிக் காட்சியில், கேரளாவுக்கு ஏற்றிச் செல்லப்படும் மாடுகள், மாட்டுக்கறி கடை என கொதிப்பான அரசியல் நிறைந்த விவகாரத்தையும் தொட்டுச் சென்றிருப்பதன் மூலம், அரசியல் நிலைப்பாடு இயல்பாகவே இந்தப் படத்தில் உருவாகிறது.
கொள்கை ரீதியான முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள அரசியல் சூழலில், கிராம வாழ்க்கையில் முன்னேற்றங்கள் பெரிதாக நிகழவில்லை என்ற கருத்தை, அனைவரையும் குற்றம் சாட்டி முன்வைக்கும் போது, அது இயல்பாகவே வேறொரு கருத்தியலோடு இணைந்து கொள்கிறது. கிராமங்கள் சாதியத்தின் கோரப் பிடியில் சிக்கியிருப்பது குறித்தோ, விவசாயிகளின் வாழ்க்கையில் அரசும் கார்ப்பரேட்களும் இணைந்து நிகழ்த்தும் சிக்கல் குறித்தோ எந்தப் படமும் வெளிவராமல், தொடர்ந்து கிராமங்கள், மாடுகள், விவசாயிகள் எனப் புகழ்மாலை சூடுவதும், பஞ்சப் பாடல் பாடுவதும் பார்வையாளர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வேண்டுமானால் லாபம் ஈட்டலாம்; எளிய மக்களுக்கு எந்தப் பயனும் தரப்போவதில்லை. அப்படியான படங்களின் வரிசையில் இணைந்துள்ளது `இராமே ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்’.
`இராமே ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்’ அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகியுள்ளது.