Home Movie Review: மொபைல் ஃபோன் நோண்டாமல் படம் பார்க்கவும் - ‛ஹோம்’ சொல்லும் மெசேஜ்!
மொபைல் ஃபோன் அடிக்ஷன், குடும்பத்தினரோடு நேரம் செலவழிப்பது, அப்பா - மகன் உறவு என நிறைய சப்ஜக்ட்களை பேசியிருக்கிறது ஹோம்.
Rojin Thomas
Indrans, Sreenath Bansi, Manju Pillai, Vijay Babu, Anoop Menon
மலையாள திரைப்படமான ’ஹோம்’, அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கிறது. ரோஜின் தாமஸ் இயக்கியுள்ளார். ’ஓலிவர் ட்விஸ்ட்’ என்ற பெயர் கொண்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ், படம் முழுக்க தனது அசாத்திய நடிப்பால் கட்டிப்போடுகிறார். ஓலிவர் ட்விஸ்ட், தனது தந்தை, மனைவி, இரண்டு மகன்ளோடு அழகான ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
டிரெண்டுக்கு ஏற்றது போல, ஸ்மார்ட் ஃபோனால் வரும் பிரச்சனைகள், உறவுகளுக்குள் விழும் விரிசல்கள், வீடியோ அழைப்புகள் வழியே சண்டை, விவாதம், அன்பு, பாசம் என அனைத்தையும் கடத்துவது எவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்துகின்றது என்பதை இப்படம் பாடமாக சொல்லாமல், இயல்பாக சொல்லியுள்ளது. ஸ்மார்ட் ஃபோன் மோகத்திற்கு ஓலிவர் ட்விஸ்ட்டும் சிக்குகிறார். வெறும் போன் வாங்கிட வேண்டும் என்ற ஆசை மட்டும் இல்லை, ஸ்மார்ட் ஃபோன் மூலம் தனது மூத்த மகனிடம் (ஸ்ரீநான் பாஸி) பேச முயற்சிக்கிறார். எந்நேரமும் போனும், கையுமாக இருக்கும் மகனிடம், ஸ்மார்ட் ஃபோன் வழியாக பேச ஆசைப்படுகிறார், நேரம் செலவிட வழி தேடுகிறார். “அஞ்சு நிமிஷம் பேசனும்” என ஓலிவரும், அவரது மனைவியும் தங்களது மகனிடம் கேட்கும் போதெல்லாம், அவன் தட்டிக் கழிக்கின்றான். ஒவ்வொரு முறையும் மனமுடைந்து போகிறார்கள், கோபப்படுகிறார்கள். ஆனால், அமைதியாக கடந்துவிடுகிறார்கள்.
திரைப்பட இயக்குநரான ஸ்ரீநாத் பாஸி, தனது இரண்டாவது படத்தின் கதையை எழுதி முடிப்பதற்காக, அமைதியை தேடி வீட்டிற்கு வருகிறார். அவர் கதையை எழுதி முடித்தாரா, எதிர்ப்பாராத நேரத்தில் தனது அப்பாவால் நிகழக்கூடிய பிரச்சனைகளை சமாளித்தாரா, இருவருக்கும் இடையே புரிதல் உண்டானதா என்பதை உணர்ச்சி வசமாகவும், காமெடியாகவும், போர் அடிக்காமலும் சொல்லி இருக்கிறது ஹோம்.
படம் முழுக்க ஆங்காங்கே பாடல்கள். திரைக்கதையை ஒட்டியே பாடல்கள் இருந்தாலும், சில இடங்களில் தவிர்த்திருக்கலாம். பொதுவாக ஒரு குடும்பத்தில் உள்ள தாத்தா, அப்பா, அம்மா, வேலைக்கு செல்லும் மகன், சிறுவன் என அனைவரது எமோஷன்களையும் எதார்த்தமாக காட்டியிருக்கிறார்கள்.
மொபைல் ஃபோன் அடிக்ஷன், குடும்பத்தினரோடு நேரம் செலவழிப்பது, அப்பா - மகன் உறவு என நிறைய சப்ஜக்ட் பேசியிருந்தாலும், அனைத்தும் ஒன்றோடு ஒன்று இயக்குநர் இணைத்திருக்கும் விதம், பார்ப்பவர்களையும் படத்தோடு இணைத்தே வைத்திருக்கிறது.
ஹிட்டான ஃபேமிலி டிராமா மலையாள படங்களின் வரிசையில், ஹோம் இடம் பிடித்திருக்கிறது. ஃபீல் குட் லிஸ்டில் வகைப்படுத்தக்கூடிய இத்திரைப்படம், ஓடிடியில் பார்க்க சரியான படம். அனைத்து வயதினருக்குமான படம், எஞ்சாய் பண்ணலாம்!