Vadakkupatti Ramasamy Review: நகைச்சுவையில் வென்றாரா வடக்குப்பட்டி ராமசாமி? முழு விமர்சனம் இதோ!
Vadakkupatti Ramasamy: நடிகர் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் விமர்சனம் குறித்து இங்கு காணலாம்.
Karthik Yogi
Santhanam, Megha Akash, Nizhalgal Ravi, M.S. Bhaskar, Lollu Sabha Maaran, John Vijay, Seshu, Cool Suresh,
இயக்குநர் கார்த்திக் யோகி சந்தானத்தை வைத்து "டிக்கிலோனா" என்ற படத்தின் மூலம் நகைச்சுவை ட்ரீட் கொடுத்திருந்தார். இதையடுத்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தினை கொடுத்துள்ளது. இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சர்ச்சை
சந்தானம் கதாநாயகனாக நடிக்க முடிவெடுத்ததில் இருந்து காமெடி ட்ராக்கில் மிகவும் உறுதியாக இருக்கின்றார் என்பதற்கு வடக்குப்பட்டி ராமசாமி மற்றொரு உதாரணம். படத்தின் ட்ரைலெர் வெளியானபோது ஏற்பட்ட விவாதம் படத்தின் மீதான கவனத்தை கொஞ்சம் ஈர்த்திருந்தாலும், ட்ரெய்லரால் ஏற்பட்ட விவாதத்திற்கும் இந்தப் படத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகின்றது. படம் முழுக்க காமெடி காட்சிகளாலும் காமெடி வசனங்களாலும் ரசிகர்களை சிரிக்க வைக்க படக்குழு எடுத்த முயற்சிகள் பல இடத்தில் வெற்றி கண்டுள்ளது.
கதைக்கரு
ஒரு ஊரில் இருக்கும் சிறுவனுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. தற்செயலாக நடந்த சம்பவத்தால் அவன் செய்த பானையை அந்த ஊரில் உள்ளவர்கள் கடவுளாக வழிபட ஆரம்பித்துவிட்டனர். இதனை தனக்கு வருமானம் பார்க்கும் ஒரு வியாபாரமாக மாற்றி வாழ்ந்து வருபவர் சந்தானம். இவருடன் இணைந்து ஊரை ஏமாற்றிவருபவர்களாக மாறனும், லொல்லு சபா சேஷூவும் நடித்துள்ளனர். இவர்களுக்கு அந்த ஊருக்கு வட்டாச்சியராக வரும் தமிழ் தொந்தரவு கொடுக்க, கோயில் பூட்டப்படுகின்றது. இதனால் ஏற்பட்டது என்னென்ன? இறுதியில் என்ன ஆச்சு? என்பது படத்தின் மிதிக் கதை. இதில் சந்தானம் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து வெளியேற “மெட்ராஸ் ஐ” நோயை பயன்படுத்துவது, மக்களை அதிலிருந்து காக்க நினைக்கும் மருத்துவராக வருபவருக்கு ஒத்துழைக்காத ஊர் மக்களின் மனநிலை, படம் நடப்பதாக சொல்லப்படும் 1974ஆம் ஆண்டு காலகட்டத்தினை காட்டுகின்றது.
காமெடி ட்ரீட்
சந்தானம், மாறன், லொல்லு சபா சேஷூ இவர்கள் படத்தில் வரும் காட்சிகள் காமெடி சரவெடியாக இருக்கின்றது. அதே ஊரில் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ள ரவி மரியா மற்றும் ஜான் விஜய் இடையே நடக்கும் சண்டைகள் தியேட்டரில் கைதட்டல்களைப் பெறுவது மட்டும் இல்லாமல் ரசிக்க வைக்கின்றது. இந்தக் காமெடி ட்ராக்குகள் ஒருபுறம் ஓடிக்கொண்டு இருக்க, நிழல்கள் ரவியின் காமெடி ரசிகர்களுக்கு ட்ரீட். ஒரு கட்டத்திற்கு மேல் நிழல்கள் ரவி திரையில் வந்தாலே ரசிகர்கள் சிரிக்கத் தொடங்கிவிடுகின்றனர்.
ஹீரோயினாக நடித்துள்ள மேஹா ஆகாஷ் அழகாக இருந்தாலும் அவருக்கு மிகவும் முக்கியமான கதாப்பாத்திரம் இல்லை. படத்தின் இசை காமெடி தன்மைக்கு ஏற்றமாதிரி சிறப்பாக அமைத்துள்ளார் ஷான் ரோல்டன். இரண்டாம் பாதியில் படம் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தினாலும், நிழல்கள் ரவியின் காட்சிகள் சலிப்பை போக்குகின்றன. இறுதியாக வரும் மொட்டை ராஜேந்திரன் ஸ்கோர் செய்கின்றார். கூல் சுரேஷ் கதாப்பாத்திரம் நகைச்சுவையில் கவனம் ஈர்க்கின்றது.
இரட்டை அர்த்த வசனங்கள்
தமிழ் சினிமாவில் காமெடி டிராக்கை மையப்படுத்திய கதைகளிலும் சரி, ஜனரஞ்சகமான படங்களிலும் சரி ஆங்காங்கே வரும் இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுழிக்க வைக்கின்றது. இந்தப் படத்திலும் இரட்டை அர்த்த வசனக் காட்சிகள் இருக்கின்றன. ஆனால் அந்தக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை.
படத்தில் வரும் சில வசனங்கள் அரசியல் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக, ”ஜெய் பாரத், கோயில் தாசில்தார் கைக்கு போயிடக்கூடாது” போன்ற வசனங்களுக்கு மாற்றாக, வேறு வசனங்கள் இருந்திருக்கலாம். மொத்தத்தில் வடக்குப்பட்டி ராமசாமி சந்தானத்தை மற்றொரு சக்ஸஸ் மீட்டிற்கு தயார்படுத்தியுள்ளது.