Three Of Us Review: சில விஷயங்கள் மறக்கலாம்.. ஆனாலும் அது உயிரில் தங்கும்.. Three Of Us படத்தின் விமர்சனம் இதோ..
Three Of Us : அவினாஷ் அருண் இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் த்ரீ ஆஃப் அஸ் (Three Of Us) படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்
Avinash Arun
Shefali Shah , Jaideep Ahlawat ,Swanand Kirkire
Three Of Us : அவினாஷ் அருண் இயக்கத்தில் உருவாக்கி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கும் இந்திப் படம் த்ரி ஆஃப் அஸ் ( Three Of Us) . ஓம்கார் அச்யுத் பார்வே , அர்பிதா சேத்தர்ஜி, அவினாஷ் அருண் மூவரும் இணைந்து இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். ஷெபாலி ஷா, ஜெய்தீப் அஹ்லாவத், ஸ்வானந்த் கிர்கிரே உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். பல்வேறு திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்று சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது இப்படம்.
படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இருப்பவர் ஷைலஜா. நீதிமன்றத்தில் விவாகரத்துக் கேட்டு வருபவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களுக்கு சேர்ந்து இருக்கும் ஆலோசனை வழங்குபவர். ஷைலஜா தனது வேலையில் இருந்து ஓய்வு பெறும் நாளில் இருந்து தொடங்குகிறது படம்.
முழு படத்தையும் ஷைலஜாவின் கதாபாத்திரத்தை முழுவதுமாக புரிந்துகொள்ளும் வகையில் இந்த முதல் காட்சி மிக நுட்பமாக கதையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஷைலஜா, அவள் கணவர் திபாங்கர் இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு நீண்ட காலம் சேர்ந்திருப்பதால் உருவாகும் சலிப்பை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. இனி இவர்கள் இருவருக்கும் இடையிலான வாழ்க்கையில், புதிதாக ஏதும் நடக்க வாய்ப்பில்லை என்கிற நிலையில் காலம் ஒரு ஆச்சரியத்தை நிகழ்த்துகிறது. டிமென்ஷியா என்கிற நரம்பியல் நோயினால் பாதிக்கப்படுகிறார் ஷைலஜா. இன்னும் சில காலங்களில் தனது நினைவை கொஞ்சம் கொஞ்சமாக அவர் இழந்து வருகிறார்.
எப்போதும் நாம் நமக்கு நெருக்கமாக இருக்கும் விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள மாட்டோம், என்று படத்தில் ஒரு வசனம் இருக்கிறது. தனது நினைவை மொத்தமாக இழக்கப்போவது தெரிந்த ஷைலஜா, தனது கணவனுடன் தான் சிறு வயதில் வசித்த கொங்கன் பிரதேசத்தில் இருக்கும் ஒரு கடலோர கிராமத்திற்கு செல்கிறார்.
தனது பள்ளி, நெருங்கிய தோழி , பதிவ்பருவ வயதில் மலர்ந்த காதல் , எதிர்பாராமல் நிகழ்ந்த இழப்புகள் என ஒவ்வொரு நினைவையும் இந்த பயணத்தில் மீட்டுக் கொள்கிறார் ஷைலஜா. ஷைலஜா அவளது கணவன் திபாங்கர் , ஷைலஜாவின் பால்யகால காதலன் பிரதீப் காமத், ஆகிய இந்த மூவருக்கு இடையில் ஏற்படும் உரையாடல்கள், மனமாற்றம் என கவிதைகளை கோர்த்துச் செல்கிறார் இயக்குநர் அவினாஷ் கோஷ்.
த்ரீ ஆஃப் அஸ் படத்தின் மிகப்பெரிய பலம் காலத்திற்கும் மனிதர்களுக்கு இருக்கும் அனுசரணையை அது வலியுறுத்துகிறது. ஒவ்வொரு மனிதர்களிடம் தங்களது கடந்த காலத்தை மாற்றியமைக்க ஒரு பெரும் ஏக்கமும் எதிர்காலத்தை தெரிந்துகொள்ளும் பெரும் எதிர்பார்ப்பும் எல்லா காலத்திலும் இருக்கிறது. தன் வசம் இல்லாமல் காலத்தின் முன் மனிதர்கள் தோல்வியடைந்தவர்களாகவே தங்களை உணர்கிறார்கள். நம் கையில் ஏதும் இல்லை என்கிற உண்மை தெரியும்போது கடைசியில் வெறுமையே மிஞ்சுகிறது.
அந்த வெறுமையை அளிக்காமல் காலத்துடன் ஒரு சமரசத்திற்கு வருகிறவளாகவே ஷைலஜாவின் கதாபாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. தனது ஒட்டுமொத்த நினைவுகளையும் இழக்கப் போகும் அவருக்கு நல்ல நினைவுகள், கெட்ட நினைவுகள் என்று ஏதும் இல்லை. இந்த சின்ன பயணத்தில் தன் நினைவில் மீட்கும் ஒவ்வொரு ஞாபகத்தையும் பொக்கிஷத்தின் முன் நிற்கும் மிளிர்வு அவரது கண்களில் வெளிப்படுகிறது.
அதே நேரத்தில் மறுபக்கம் ஷைலஜாவின் பால்ய கால காதலனான பிரதீப் கதாபாத்திரம் இந்தப் படத்திற்கு முழுமை சேர்க்கும் ஒரு முக்கியமான அங்கம். ஒரே ஊரில் பல வருடங்கள் வாழ்ந்துவிட்ட சலிப்பான அவரது வாழ்க்கை ஷைலஜாவின் வருகையால் மழைக்குப் பின் மரத்தின் பசுமையைப் போல் புது ஒளி பெறுகிறது. உலகம் புரியாத வயதில் ஷைலஜாவின் மேல் அவருக்கு இருந்த காதல் ஷைலஜா சென்றபின் ஒரு பூட்டிய அறையாக இருந்துவிடுகிறது. அவர் வேறொரு திருமணம் செய்துகொள்கிறார்.
தனது மனைவிக்கு அன்பான ஒரு கணவனாக இருக்கிறார். இரண்டு மகள்களுக்கு வாஞ்சையான ஒரு தந்தையாக. ஆனால் ஷைலஜாவின் வருகைக்குப் பின் பல வருடங்கள் திறக்காமல் இருந்த அந்த கதவு இப்போது திறக்கிறது. ஆனால் அஞ்சாமல் ,பிடிவாதம் இல்லாமல் பிரதீப் தன்னை வெளிப்படுத்துகிறார். அவரது மனைவியுடன் இதைப் பற்றி பேசுகிறார். ஷைலஜாவுக்கு எழுதிய கவிதையை தன் மனைவியிடம் படிக்கக் கொடுக்கிறார்.
மூன்றாவதாக ஷைலஜாவின் கணவர் திபாங்கர். ஒரு இன்சூரன்ஸ் ஏஜண்டாக தனது வாழ்க்கையை ஓட்டிவருகிறார். படத்தின் தொடக்கத்தின் சில காட்சிகளில் திபாங்கரின் கதாபாத்திரம் பார்வையாளர்களை பெரிதாக கவர்வதில்லை. சொல்லப் போனால் அது நம்மை லேசாக எரிச்சலடையவே செய்கிறது. நியாபக மறதி இருக்கும் மனைவி சூப்பில் உப்பு போட மறந்ததற்கு கோபித்துக் கொள்ளும் ஒரு நபராக தான் திபாங்கர் நமக்கு அறிமுகப்படுத்தப் படுகிறார். தனது மகனிடம் வீடியோ கால் பேசும்போது தன் மனைவிக்கு தான் ஆதரவாக இருப்பதை நினைத்து பெருமையாக பேசிக் கொள்கிறார்.
ஆனால் திடீரென்று ஷைலஜா தெரியாத ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என்று சொல்லும்போது ஒரு வாரம் லீவு எடுத்துவிட்டு அவருடன் செல்கிறார். தெரியாத ஊரில் ஷைலஜா மனம் போன போக்கில் நடக்க அவளுக்குப் பின் கேள்விகள் நிறைந்த முகத்துடன் நடக்கிறார். தனது மனைவி தனது பாலியகால காதலனை சந்திக்கும்போது அவர்களுக்கு தனியாக பேச எழுந்து செல்கிறார். இத்தனை வருடம் தன் மனைவியிடம் தெரியாத மகிழ்ச்சியைப் பார்த்து தன்னிடம் ஏதோ குறை இருக்கிறது என்று சிறுமைப்படுகிறார்.
படத்தின் தொடக்கத்தில் ஷைலஜாவின் வேலையை பார்க்கிறோம் இல்லையா?. சேர்ந்து இருக்க எத்தனையோ காரணங்கள் இருந்தும் அற்ப காரணங்களுக்காக திருமண உறவுகளில் இருந்து தம்பதியினர் பிரிந்து செல்கிறார்கள். குறைகளே இல்லாத ஒரு திருமண வாழ்க்கை என்பது இல்லை என்கிற உண்மையை ஷைலஜா தனது வேலையில் கிடைத்த அனுபவத்தின் வழி அறிந்திருக்கிறார்.
தன்னுடைய கணவனிடம் எவ்வளவோ குறைகள் அவருக்கு இருந்திருக்கலாம் ஆனால் அதை பெரிதாக்கி அவர் சண்டைப் போட்டுக்கொண்டது இல்லை.தன்னுடைய சிறுவயது காதலனை சந்தித்தப் பின் அவள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறாள். இதை பார்க்கும் அவள் கணவன் இத்தனை நாள் தன்னுடன் ஏன் அவள் மகிழ்ச்சியாக இருந்தது இல்லை என்று கேட்கிறான். ஒரு கணவன் மனைவியாக இருவரும் எப்போது இருவரும் சந்தோஷமாக இருந்தோம் என்று கேட்கிறான்.அதற்கு ஷைலஜா நாம் எப்போது சோகமாக இருந்தோம் என்று கேட்கிறாள்.
வாழ்க்கையை அதன் நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்ள அவள் எப்போதோ பழகிவிட்டாள் என்பதற்காகவே இந்த வசனம்.
இப்படி மூன்று தளங்களில் நிற்கும் மனிதர்களையும் அவர்களை ஒருவர் முன் ஒருவர் நிறுத்தி உரையாட வைப்பது மட்டுமே இயக்குநரின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இதில் அவர் யார் சார்பும் எடுப்பதில்லை. அவர் காலத்தின் பக்கமே நிற்கிறார்.
ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு கதாபாத்திரங்கள் பேசும் சிக்கனமான வசனங்கள் இயக்குநருக்கு வாழ்க்கையின் அசட்டுத் தனங்களின் மீது கூட இருக்கும் கரிசனத்தை காட்டுகின்றன. சிறு சிறு கற்பனைகள், நகைச்சுவை துணுக்குகள், காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் விதம் வியக்க வைக்கின்றன. ஒரு சுவாசக் காற்றின் வெம்மைப் போல் பின்னணியில் இருக்கும் ஊர் வியாபிக்கிறது. இந்தப் படத்திற்கு ஒளிப்பரிவையும் இயக்குநர் அவினாஷ் செய்திருக்கிறார். ஒளியையும் நிழலையும் அவர் பயண்படுத்தியிருக்கும் காட்சிகள் ஒருவிதமான மர்மத்தை உருவாக்குகின்றன.
மிக சிறந்த ஒரு காட்சியமைப்பின் உதாரணமாக ஷைலஜா மற்றும் பிர்தீப் ராட்டினத்தில் அமர்ந்திருக்கிறார்கள். கழுகுப் பார்வையில் பார்ப்பதற்கு காலச்சகரம் போல் தெரிகிறது அது.
அந்த காலச் சக்கரத்தின் சுழற்சியில் இருவர் தங்களது முதல் காதலை இழக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் அவகாசம் கிடைத்திருந்தால் என்கிற ஏக்கம் இருவருக்கும் இருக்கிறது. பேச எவ்வளவோ இருக்கின்றன. ஆனால் நேரம்? வெறும் சில நிமிடங்கள் அந்த சக்கரம் அந்தரத்தில் அசையாமல் நிற்கிறது. இந்த முறை அவர்களுக்கு ஒரு சிறு அவகாசம் கிடைக்கிறது. இருவரும் மனம் விட்டு பேசுகிறார்கள்.
ஷைலஜாவாக நடித்த ஷெஃபாலி ஷா ஒவ்வொரு காட்சியிலும், பறவை அமர்ந்தாலே ஒடிந்துவிடும் மென்மையான கிளையைப்போல் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். ஷைலஜாவாக தன்னுடைய விதியை ஏற்றுக் கொள்ளும் ஷெஃபாலி தன் நடிப்பால் அதை முழுமையாக்குகிறார். எல்லாவற்றுக்கும் மேல் பிரதீப் ஆக நடித்த ஜெய்தீப்பின் நடிப்பை மிகைப்படுத்தாமல் பாராட்டுவது சிரமம்.
படத்தின் இயக்குநர் அவினாஷுக்கு கவிதை எழுதவும் மிக நேர்த்தியாகவே வருகிறது. தனது முன்னால் காதலி திரும்பி வந்த ஆனந்தத்தில், கைவிட்ட பழக்கமான கவிதை எழுதுவதை மீண்டும் தொடங்குகிறார் பிரதீப். அந்த கவிதை இப்படி முடிகிறது."இன்றைய விளையாடி கழித்தால் மட்டுமே நாளை வரும்".