Raththam Movie Review: விஜய் ஆண்டனியின் சைலண்ட் ட்ரீட்மென்ட்.. ரத்தம் படம் விமர்சனம் இதோ..!
விஜய் ஆண்டனி நடித்து சி.எஸ் அமுதன் இயக்கியிருக்கும் ரத்தம் திரைப்படத்தின் விமர்சனத்தைக் இங்கு காணலாம்
C S AMUDHAN
VIJAY ANTONY, MAHIMA NAMBIAR, NANDITHA SWETHA, RAMYA NAMBEESAN, NIZHALGAL RAVI
விஜய் ஆண்டனி நடித்து சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் ரத்தம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். கண்ணன் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கோமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, தனஞ்சயன் ஆகியவர்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள்.
ரத்தம்
தீவிரமான ஒரு சமூக பிரச்சனையை சுவாரஸ்யமான ஒரு படமாக மாற்ற முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். சாதி, மதம், மொழி, வர்க்கம் , அதிகாரம் , கோபம் என பல காரணங்களுக்காக மனிதர்கள் கொலை செய்கிறார்கள். ஆனால் இந்த கொலைகளை அவர்கள் தானாக செய்கிறார்களா? இல்லை குற்றவாளிகளாக இருக்கும் அவர்களே யாரோ ஒருவரின் சுயலாபத்திற்காக பயன்படுத்தப்படும் பலியாடுகளா? என்பதே இப்படத்தின் கதையாகும் .
கதை
பிரபல பத்திரிக்கை நிறுவனத்தில் பத்திரிகையாளர் செழியன் என்பவரை அடையாளம் தெரியாத ஒரு இளைஞர் கொலை செய்கிறார். தனது தலைவரைப் பற்றி செய்தி எழுதியதற்காக தான் இந்த கொலையை செய்ததாக தனது செயலை நியாயப்படுத்துகிறான் கொலையாளி. இந்த கொலையை அந்த இளைஞர் ஏன் செய்கிறார் என்கிற புதிரில் இருந்து தொடங்கும் கதை மெல்ல நமது கதாநாயகன் ரஞ்சித் குமாரை (விஜய் ஆண்டனி) நோக்கி நகர்கிறது.
ஒரு காலத்தில் உலக அளவில் புகழ்பெற்ற புலனாய்வு பத்திரிகையாளராக இருந்த ரஞ்சித் தற்போது தனது மகளுடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறார். தனது மனைவி இறந்துவிட்ட குற்றவுணர்ச்சியால் தீவிர மதுபோதைக்கு அடிமையாகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் மீண்டும் தனது வேலைக்குத் திரும்பும் ரஞ்சித் மர்மமான முறையில் நடக்கும் இந்த கொலைகளை செய்பவர்களை தேடிக் கண்டுபிடிப்பதே படத்தின் கதை.
வழக்கமான ஒரு கிரைம் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் ரத்தம் திரைப்படம் தீவிர சமூகப் பிரச்சனைகளை எப்படி ஒரு கும்பல் தங்களுடைய தனிப்பட்ட ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது என்பதைப் பற்றிய படமாக உருவாகி இருக்கிறது. இந்த வில்லன் கூட்டத்தின் தலைவராக இருக்கும் மஹிமா நம்பியார் க்யூட்டான ஒரு கொடூர வில்லியாக நடித்திருக்கிறார்.
படம் எப்படி?
நல்ல ஒரு கதையை கொண்டிருந்தாலும் அதை சராசரிக்கும் குறைவான சுவாரஸ்யத்தில் எடுத்திருக்கிறார் சி.எஸ் அமுதன். இந்த கொலைகளை எல்லாம் செய்பவர்களின் நோக்கம் என்ன என்பதை சொல்லாமலே சாமர்த்தியமாக கடந்துசென்று விடுகிறார். ஒன்றன் பின் ஒன்றாக சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள் வந்தபடி இருக்கின்றன. எல்லா காட்சிகளும் ஏற்கனவே நாம் பார்த்த வேறு ஒரு படத்தை நியாபகப் படுத்துகின்றன. நடிப்பாக விஜய் ஆண்டனியின் வழக்கமான சைலண்ட் ட்ரீட்மெண்ட் பெரிதாக வர்க் அவுட் ஆகவில்லை.
நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி , ரம்யா நம்பீசன் உல்ளிட்டவர்கள் நன்றாக நடித்திருந்தாலும் வெளிச்சம் படும் அளவிற்கு சிறப்பான கதாபாத்திரங்கள் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. பல சமயங்களில் மொத்தமாக கலர் மீன்களை வாங்கிவந்து குட்டி தொட்டிக்குள் போட்டது போல் ஒரே இடத்திற்கும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் கதாபாத்திரங்கள். குறைவான பாடல்கள் என்றாலும் படத்தில் பின்னணி இசை கவனம் ஈர்க்க தவறுகிறது. ஆக மொத்தத்தில் வன்முறை தெரிப்பதை குறிக்கும் வகையில் “ரத்தம்” என டைட்டில் வைத்தாலும் உள்ளே அதற்கான எந்த தடயமும் பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை..!