Petta Kaali: ஜல்லிக்கட்டா... ஜாதியா... பேட்டைக்காளி சொல்லப் போகும் கதை... முதல் விமர்சனம் இதோ!
Petta Kaali: ஜல்லிக்கட்டை வைத்து நடக்கும் ஜாதிய அரசியலை கூறும் படம் என்பது முதல் எபிசோடில் தெளிவாக தெரிகிறது. பார்க்கலாம், எஞ்சி இருக்கும் எபிசோடுகள் என்ன சொல்லப் போகின்றன என்பதை!
L.Rajkumar
Kishore, Vela.Ramamurthy, kalaiarasan
100 சதவீதம் தமிழ் என்கிற ஸ்லோகனுடன் சமீபத்தில் களமிறங்கிய ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம், பெருமையோடு வெளியிட்டிருக்கும் வெப்சீரிஸ் தான் ‛பேட்டைக்காளி’. ஜல்லிக்கட்டு என்றாலே மதுரையை சார்ந்தை விசயமாக பார்க்கப்படும் , பேசப்படும், நினைவூட்டப்படும் சினிமா தளத்தில், பேட்டைக்காளி மதுரையின் அண்டை மாவட்டமான சிவகங்கையில் தொடங்குகிறது.
பண்ணை குடும்பத்திற்கும், அங்கு பணியாற்றிய பணியாளர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்னையில் இருந்து தொடங்குகிறது கதை. நிலம் கேட்ட கூலிப்பணியாளர்களை விரட்டியடிக்கும் பண்ணையாரின் பகை, தலைமுறைகளாக தொடர்கிறது. நிலமின்றி, பணியின்றி அகதிகளாக தனித்து வாழும் விவசாய கூலிகளுக்கு தலைமை ஏற்கிறார் கிஷோர். மலைகாட்டில் வசிக்கும் அவர்களுக்கு காட்டு மாடுகளின் தலைவன் மாடு கிடைக்கிறது. அதை கட்டிப் போடும் போது, அதை தேடி வரும் மாட்டுக் கூட்டத்தை வைத்து தங்கள் தொழிலை தொடங்குகிறார்கள் விவசாய கூலிகள்.
இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், மற்றொரு புறம், கவுரவம், ஆதிக்கம் என மூதாதையர் பாணியில் வாழ்வியலை தொடர்ந்து கொண்டிருக்கிறார் மணியக்காரரான வேல.ராமமூர்த்தி. தன் வீட்டு காளையில் கூட தனது கவுரவம் இருப்பதாக எண்ணும் அவர், தன் மூதாதையரால் விரட்டப்பட்ட விவசாய கூலிகளை இன்னும் அந்த கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்.
View this post on Instagram
இதற்கிடையில், விவசாய கூலிகளின் தலைவனாக இருக்கும் கிஷோரின் அக்கா மகனாக வரும் கலையரசன், சிறந்த மாடுபிடி வீரராக இருக்கிறார். மாடு பிடிப்பதும், கபடி விளையாடுவதுமே அவரது முழு நேரத்தொழிலாக உள்ளது. இந்த நேரத்தில் அஞ்சு நாடு மஞ்சுவிரட்டு அறிவிக்கப்படுகிறது. விவசாய கூலிகள் வசிக்கும் கிராமத்தை சேர்ந்தவர்கள் யாரும், மணியக்காரரின் காளையை தொடவோ, அடக்கவோ கூடாது என தண்டோரா இசைக்கப்படுகிறது. அதை அந்த ஊர் காரர்களும் ஏற்கிறார்கள். ஆனால், ஊர் பெரியவர்களின் எச்சரிக்கையை மீறி, எப்படியாவது மணியக்காரர் காளையை அடக்க வேண்டும் என தீவிரமாக முயற்சிக்கிறார் கலையரசன்.
மஞ்சுவிரட்டு நாளில், பலர் முன்னிலையில்ல மணியக்காரர் காளை அடக்கப்படுகிறது. மேடையில் அமர்ந்திருக்கும் வேல.ராமமூர்த்திக்கு அது பெரிய அவமானமாகிறது. காளையை அடக்கிய பெருமிதத்தில் கலையரசன் நிற்க, அவமானத்தில் மேடையில் இருந்து தனது துண்டை உதறிவிட்டு மணியக்காரர் கீழே இறங்கியதோடு முடிகிறுது முதல் எபிசோட். அடுத்த எபிசோடுகள் அக்டோபர் 28 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காளையை அடிக்கியதால் என்ன நடக்கப் போகிறது? மணியக்காரர் ரியாக்ஷன் என்ன? கலையரசனின் ஆபத்து வருமா? அதற்கு கிஷோ என்ன ரியாக்ட் செய்யப் போகிறார்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் நகர்கிறது அடுத்தடுத்த எபிசோடுகள். வெற்றிமாறனின் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கியிருக்கும் பேட்டைக்காளி, சிராவயல் மஞ்சுவிரட்டு காட்சிகளால் கண்ணை நிரப்புகிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவு, சிவகங்கை பகுதியை சிந்தாமல் சிதறாமல் நமக்கு கண் முன் நிறுத்துகிறது. சந்தோஷ் நாராயணன் மேற்பார்வையில் டைட்டில் இசையும், பின்னணி இசையும் பகை, வன்மன், குரோதத்தை தூக்கி நிறுத்துகிறது. இது ஜல்லிக்கட்டு படமல்ல... ஆனால், ஜல்லிக்கட்டை வைத்து நடக்கும் ஜாதிய அரசியலை கூறும் படம் என்பது முதல் எபிசோடில் தெளிவாக தெரிகிறது. பார்க்கலாம், எஞ்சி இருக்கும் எபிசோடுகள் என்ன சொல்லப் போகின்றன என்பதை!