MGR Magan | அதுவும் இல்ல.. இதுவும் இல்ல..! அதே மாவு.! ஹாட்ஸ்டாரில் வந்த `எம்ஜிஆர் மகன்’.. படம் எப்படி?
ஊராருக்கு உதவி செய்து புகழ்பெற்ற அப்பாவுக்கும், ஊராருக்கு உதவி செய்வது போல நடித்துப் புகழ்தேடும் மகனுக்கும் இடையிலான மோதலைக் கதைக்களமாகக் கொண்டு வெளியாகியிருக்கிறது `எம்ஜிஆர் மகன்’.
பொன்ராம்
சசிகுமார், சத்யராஜ், மிர்னாளினி, சமுத்திரகனி, பழ கருப்பையா, சரண்யா பொன்வண்ணன்
ஊராருக்கு உதவி செய்து புகழ்பெற்ற அப்பாவுக்கும், ஊராருக்கு உதவி செய்வது போல நடித்துப் புகழ்தேடும் மகனுக்கும் இடையிலான மோதலைக் கதைக்களமாகக் கொண்டு வெளியாகியிருக்கிறது `எம்ஜிஆர் மகன்’. அப்பாவாக சத்யராஜும், மகனாக சசிகுமாரும் நடித்துள்ள `எம்ஜிஆர் மகன்’ படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்கியுள்ளார்.
எம்.ஜி.ராமசாமி என்ற எம்.ஜி.ஆர் (சத்யராஜ்) சித்த மருத்துவர். அவருக்கும் அவரது மகன் `அன்பளிப்பு’ ரவிக்கும் (சசிகுமார்) ஏழாம் பொருத்தம். சிறுவயதில் ஏதோ தவறு செய்துவிட்ட மகனைப் பல ஆண்டுகள் கழிந்த பிறகும் வீட்டுக்குள் அனுமதிக்காத எம்ஜிஆர், ஊரில் உள்ள கல் மலை ஒன்றைக் காப்பாற்ற வழக்கு நடத்தி வருகிறார். மூலிகைகள் இருக்கும் மலையை உடைக்கக் கூடாது என எம்ஜிஆர் தரப்பும், அதனை உடைத்து கல் எடுத்து வியாபாரம் செய்ய நினைக்கும் அரசியல்வாதி (பழ.கருப்பையா) தரப்பும் மோதுகின்றன. இதில் ரவி அரசியல்வாதி தரப்பில் இருப்பதும் அவரது அப்பா எம்ஜிஆருக்குப் பிடிக்காமல் இருக்கிறது. எம்ஜிஆரும் அவரது மகன் ரவியும் தங்களுக்கு இடையிலான முரணை மறந்து சரியாகிக் கொண்டார்களா, கல் மலையைக் காப்பாற்றினார்களா என்பதைக் காமெடி கலந்து தன்னுடைய வழக்கமான பாணியில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.
தொடக்க காட்சியில் முல்லைப் பெரியார் அணை கட்டிய பென்னி குவிக்கிற்கு விழா எடுப்பது, பென்னி குவிக் என்பவர் யார் என்று மக்களுக்கு உணர்த்துவது எனத் தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் முதலான மாவட்ட மக்களின் வரலாற்றின் நாயகரை அறிமுகப்படுத்தி இருந்தது மிகச்சிறப்பு. ஆனால் அடுத்தடுத்து அதே போன்ற உணர்வு எழும் காட்சிகளோ, கதையின் போக்கோ இல்லாமல் போனது படத்தின் மைனஸ். தனது முந்தைய படங்களான `வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, `ரஜினி முருகன்’ போலவே இதில் கிராமம், வேலையில்லாத இளைஞர்கள், காமெடி என மீண்டும் எந்தக் கதையும் இல்லாத படமாக `எம்ஜிஆர் மகன்’ வெளிவந்திருக்கிறது. அப்பா-மகன் பிரிவதற்கும், இறுதியில் சேர்வதற்கும் எந்த அழுத்தமான காரணங்களும் இல்லை. பழ.கருப்பையா - சத்யராஜ் இடையிலான சட்டப் போராட்டமும் எந்த உணர்வுகளும் இன்றி காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
எம்ஜிஆராக வரும் சத்யராஜ் `வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் பார்த்த கதாபாத்திரம் போலவே இருக்கிறார். அதில் ஊர்த்தலைவர்; இதில் பாரம்பரிய சித்த மருத்துவர் இது மட்டுமே வித்தியாசம். சசிகுமார் தனது முந்தைய படங்களில் என்ன பாத்திரங்களில் நடித்திருந்தாரோ, அதையே இதில் செய்திருக்கிறார். கதாநாயகியாக வரும் மிர்னாளினி வழக்கமான பொன்ராம் பட நாயகியாக முதலில் முறைத்துக் கொண்டும், இறுதியில் காதலித்துக் கொண்டும் இருக்கும் கதாபாத்திரமாக வந்து போகிறார். `எம்டன் மகன்’, `களவாணி’, `வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்களில் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் தவிக்கும் அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் இதிலும் அதையே செய்திருக்கிறார். முந்தைய படங்களின் வசனங்களைக் கூட அவர் பேசியிருப்பது பார்வையாளர்களைக் கடுப்பேற்றுகிறது. வழக்கமான பொன்ராம் படங்களில் சூரி ஏற்று நடிக்கும் காமெடி கதாபாத்திரத்தை இதில் சமுத்திரகனி நடித்திருக்கிறார். சூரியை மனதில் வைத்து எழுதப்பட்ட கதாபாத்திரம் என்பது அவர் செய்யும் `காமெடி’ நமக்கு எந்த உணர்வையும் வரவழைக்கவில்லை என்பதில் தெரிய வருகிறது.
வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் காடுகளை அழிப்பது, பென்னிகுவிக் வரலாறு என இந்தக் கதையில் எவ்வளவோ சீரியஸான விவகாரங்களைப் பொழுதுபோக்கு அம்சத்துடன் அளிக்கும் வாய்ப்புகள் இருந்தும் அவற்றைச் செய்யாமல் சொதப்பியிருக்கிறது படக்குழு. பொன்ராம் இயக்கிய தனது முந்தைய திரைப்படம் `சீமராஜா’ பரவாயில்லை என்ற உணர்வை `எம்ஜிஆர் மகன்’ பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.
`எம்ஜிஆர் மகன்’ டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.